முரண் அகற்றுதல் பொருட்பாலில் உள்ள, அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு (392) என்ற குறளும், அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (428) என்ற குறளும் முரண்படுவதுபோலத் தோன்றுவதை அறிந்த மணக்குடவர், ‘அஞ்சுவது அஞ்சாமை’ (428) என்ற குறளின் உரையில், “மேல் அஞ்சாமை வேண்டும் என்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவு என்றார்” என்று கூறி முரண்பாட்டை நீக்குகின்றார். பரிமேலழகரும் மணக்குடவரும் பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே, இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கின்றார். அதிகாரந்தோறும் அமைந்துள்ள குறட்பாக்களை, கருத்து இயைபு நோக்கிப் பிரித்துப் பொருள்கூறும் முறையைப் பரிமேலழகர் மணக்குடவரிடமிருந்தே பெற்றுள்ளார். பல குறட்பாக்களின் உரையும் விளக்கமும்கூடப் பரிமேலழகர், மணக்குடவரைத் தழுவியே உரைக்கின்றார். ‘அறத்தாறு இதுவென’ என்ற குறளின் (37) விளக்கவுரையில் மணக்குடவர், “இது பொன்றினாலும் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று,”என்கிறார். பரிமேலழகர் அவர் கருத்தைத் தழுவி, “இதனாற் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது” என்று உரைக்கின்றார். ‘செவிக்குணவு’ என்ற குறளின் (412) விளக்கவுரையில் மணக்குடவர், “பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்பும் ஆதலான் ‘சிறிது’ என்றார்” என்று கூறுகின்றார். பரிமேலழகர் அவர் கருத்தை மேற்கொண்டு “நோயும் காமமும் பெருகுதலால் ‘சிறிது’ என்றும் கூறினார்” என்று உரைக்கின்றார். ‘உலகம் தழீஇயது’ என்ற குறளின் (425) உரையில் மணக்குடவர், “நீர்ப்பூப்போல மலர்தலும் குவிதலும் இன்றி, ஒரு தன்மையாகச் செலுத்துதல் அறிவு” என்று கூறுகிறார். பரிமேலழகர் அக்குறளின் விளக்கவுரையில், “கயப்பூப் போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையை நட்பாயினான் |