பக்கம் எண் :

373ஆய்வு

எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்” என்று
மணக்குடவர் கருத்தைத் தழுவி எழுதுகின்றார்.

     வேறு சில இடங்களில் பரிமேலழகர், மணக்குடவரைப் பெரிதும்
மதித்து, அவர் உரையையும் கருத்தையும் சுட்டிச் செல்லுகின்றார். அவர்
கருத்துப் பொருந்தாக இடங்களைக் காரணங்கூறி மறுக்கின்றார்.

6. பரிப்பெருமாள்

     மணக்குடவருக்குப்பின் திருக்குறளுக்கு உரை இயற்றியவர்
பரிப்பெருமாள். மணக்குடவரைப் பெரிதும் பின்பற்றி, தேவையான
இடங்களில் மட்டும் விளக்கம் எழுதிச் சேர்த்து இவர் தம் உரையை
அமைக்கின்றார். எழுத்திற்கு எழுத்து, சொல்லுக்குச் சொல் அப்படியே
மணக்குடவர் உரையை யாதொரு மாறுதலும் இன்றி எடுத்துச்
சேர்த்துக்கொண்ட இடங்களும் பல உண்டு. நன்னூலுக்குச் சிவஞான
முனிவர், சங்கர நமசிவாயர் உரையைத் திருத்தி விளக்கங்கள் சேர்த்து
அமைத்ததுபோல, பரிப்பெருமாள் மணக்குடவர் உரையைத் திருத்தி
அமைத்துள்ளார். பாலின் தொடக்கத்தில் கூறும் விளக்கம், இயல் பிரிப்புப்
பற்றிய ஆராய்ச்சி, அதிகாரத்தின் முன்னுரை, குறள் வைப்பு முறை ஆகிய
எல்லாவற்றிலும் பரிப்பெருமாள் மணக்குடவரைப் பின்பற்றியுள்ளார்.

     ‘இயற்றலும் ஈட்டலும்’ என்ற குறளின் விளக்கவுரையில் (385) இருவர்
கருத்தும் கீழே தரப்படுகின்றன.

     மணக்குடவர்: “பகுத்தல் - யானை குதிரை முதலிய படைக்குக்
கொடுத்து, அவையிற்றை உண்டாக்குதலும், இது பண்டாரம் கூட்டுமாறு
கூறிற்று”.

     பரிப்பெருமாள்: “வகுத்தலாவது யானை, குதிரை படைக்குக் கொடுத்து
அவையிற்றை உண்டாக்குதலும், அரண் செய்யவும், படைக்கலன்கள்
பண்ணுதல் முதலாயினவற்றிற்கும் கொடுத்தல். இவை எல்லாம் பண்டாரம்
ஆதலின் ஒரு பொருளைப் பலவாக வகுத்தல் என்றார். இது பண்டாரம்
கூட்டுமாறு கூறிற்று”.

     இருவர் உரைகளையும் ஒப்பிட்டு நோக்கினால் மணக்குடவர்
உரையுடன் பரிப்பெருமாள் விளக்கம் சேர்த்து, உரை எழுதிச் செல்வது
விளங்கும். இத்தகைய இடங்கள் பல, நூல் முழுவதும் உண்டு.