பக்கம் எண் :

உரையாசிரியர்கள்374

வேறு பாடம் கொள்ளுதல்

    பரிப்பெருமாள், மணக்குடவரைப் பின்பற்றினாலும் மிகச் சில இடங்களில்
வேறு பாடம் கொண்டு புதிய பொருள் காணுகின்றார்.

     ‘அணங்கு கொல்’ என்ற குறளில் (1081) கனங்குழை என்பது
மணக்குடவர் கொண்ட பாடம். கணங்குழை என்பது பரிப்பெருமாள் கொண்ட
பாடம்.

     ‘பேணாது பெட்டார்’ என்ற குறளில் (1178) காணாது அமைவில கண்
என்ற மணக்குடவர் பாடத்தை மாற்றிப் பரிப்பெருமாள் ‘காணாது இமைவில
கண்’ என்று வேறு பாடம் கொண்டுள்ளார்.

    நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ (1195)
                      - இது மணக்குடவர் கொண்ட பாடம்.

    நாம்காதல் கொண்டால் நமக்கெவன் செய்யவோ
                      - இது பரி்ப்பெருமாள் கொண்ட பாடம்.

    பிறரைச் சுட்டுதல்: பரிப்பெருமாள் மணக்குடவரையே பின்பற்றிச்
சென்றாலும், வேறு சிலருடைய உரையையும் சில இடங்களில் சுட்டுகின்றார்.

     பொருட்பாலில், ‘உளவரை தூக்காத’ (480) என்ற குறளின் உரையில்,
“ஒப்புரவாண்மை என்று ஒப்புரவிற்கே போக்குவாரும் உளர்’ என்று
சுட்டுகின்றார்.

     காமத்துப்பாலில், ‘மதியும் மடந்தை முகனும்’ (1116) என்ற குறளின்
உரையில், “பதியிற் கலங்கிய மீன் அறியா” என்று பாடம் ஓதி, தம்
நிலைமையினின்றும் கலங்கின மீன்கள் மதியினையும் மடந்தை முகத்தினையும்
அறியாவாயின எனினும் அமையும்” என்று வேறொரு கருத்தைக் கூறுகின்றார்.

வரலாறு

    திருக்குறள் உரையாசிரியர்கள் பதின்மர் பெயரைக் குறிப்பிடும்
தொண்டை மண்டலச் சதக மேற்கோள் பாடல், பரிப்பெருமாளைக் ‘கவிப்
பெருமாள்’ என்று குறிப்பிடுகின்றது.

     பரிப்பெருமாள் உரை இறுதியில்,

    தெள்ளிய மொழியியலைத் தேர்ந்துரைத்துத் தேமொழியார்
    ஒள்ளிய காமநூல் ஓர்ந்துரைத்து - வள்ளுவனார்
    பொய்யற்ற முப்பாற் பொருளுரைத்தான் தென்செழுவைத்
    தெய்வப் பரிப்பெருமாள் தேர்ந்து