பதிப்பாசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் டாக்டர் ச.மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்; திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக் கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர். தமிழகப் புலவர் குழுவின் துணைத்தலைவர். பல்கலைக் கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார். பதினாறு நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய ‘தாகூர்’ நூல் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர் துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இவருடைய தமிழ்ப்பணியைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார், ‘தமிழவேள்’ என்னும் விருதினை வழங்கியுள்ளார். குளித்தலை கா.சு.பிள்ளை தமிழ்மன்றம், ‘தமிழ்நெறிக் காவலர்’ என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது. பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர். |