திருக்குறளை மேற்கோளகக் காட்டும் இடங்களும் உரை நடைப்படுத்தும் இடங்களும் உள்ளன. மங்கல வாழ்த்துப் பாடலில், “மண்தேய்த்த” (36) என்ற அடிக்குப் பொருள் எழுதிய பின், மண்தேய்த்த என்றார், புகழ்வளரப் பூமி சிறுகலான்; மண் இடத்திற் சிறிது என்றார் வள்ளுவனாரும்” என்று கூறுகின்றார். இவ்விடத்தில் இவர் குறிப்பிடும் குறள் இன்னதென்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிப்பிடவில்லை. ஆராய்ச்சி அறிஞர் மு. இராகவ ஐயங்கார், இங்கே குறிப்பிடப்படும் குறள், ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்றில் என்பதாகும் என்று கூறியதாய் ஒரு கருத்து வழங்குகின்றது. நாடுகண் காதையில் கவுந்தி வம்பப்பரத்தைக்கும் வறுமொழியாளனுக்கும் சாப விடை தரும் பகுதிக்கு (241-5) எழுதிய விளக்கத்தில், ‘மக்கட் பிறப்பை ஒரு வார்த்தையின் இழந்து இழிபிறப்புற்றார் என்றவாறு; எனவே, யாகாவாராயினும் நாகாத்தல் வேண்டும் என்பதாயிற்று’ என்று திருக்குறளை, உரை நடைப்படுத்துகின்றார். மனையறம்படுத்த காதையில் கோவலன் கண்ணகியை, மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே (73-4) என்று பலவாறு பாராட்டுகின்றான். இவ்வரிகளுக்கு, “கட்கு இனிமையான மாசறவோடிய பொன்னை ஒப்பாய்; ஊற்றின் இன்பத்தான் முத்தை ஒப்பாய்; சுவையின் இனிமையாற் கரும்பை ஒப்பாய்; இனிய மொழியை யுடைமையால் தேனை ஒப்பாய்; என்று கூறி, ‘இவற்றால் சொல்லியது, ஒளியும் ஊறும் நாற்றமும் சுவையும் ஓசையும் ஆகலின், கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள (1101) என நலம் பாராட்டப்பட்டன” என்று விளக்கம் உரைக்கின்றார். மனையறம்படுத்த காதையில், விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும் நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி என்பதன் உரையின் கீழ், ‘இஃது உதாரம் என்னும் அலங்காரம் என்னை? உதாரம் என்ப தோதிய செய்யுளிற் குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல் |