பாயிரம் “எந்நூல் உரைப்பினும் அந் நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்கற் பாற்று. பருப்பொருட்டாகிய பாயிரம் கேட்டாற்கு, நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்”* - நக்கீரர் உலகில் வாழ்ந்து வரும் பலவகையான மக்கள் இனங்களில் ஏதேனம் ஒன்று, தனக்குரிய மொழியைப் புறக்கணித்து, காலபோக்கில் மறந்து விடுமாயின், அந்த இனம் தனது மொழியில் உள்ள இலக்கியச் செல்வங்களை இழந்துவிடும். இலக்கியங்களை இழந்தபின், அந்த இனம் தன் வரலாற்றையும் பண்பாட்டையும் மறந்துவிடும். அவற்றை மறந்து விட்ட இனம், முற்போக்கான மற்றோர் இனத்திற்கு அடங்கி வாழ்ந்து மெல்ல மெல்ல அடிமையாகிவிடும். பிறர்மொழியையும் பண்பாட்டையும் ஏற்றுக் கொண்டு தன் இயல்புகளை இழந்து விடும். இது, வரலாறு கூறுகின்ற மிகத் தெளிவான உண்மையாகும். இந்த உண்மை, ஓர் இன மக்களின் நல்வாழ்வுக்கு அவர்கள் பேசுகின்ற மொழி எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்த்துகின்றது. ‘ஓர் இன மக்கள் பேசுகின்ற மொழி மாறிவிட்டால், அந்த இனத்தின் முன்னேற்றம் தடைப்படும்; அது செய்து வரும் ஆக்கப் பணி நின்று விடும்’ என்ற உண்மையைப் பைபிள், பேபல் கோபுர வரலாற்றுக்கதையின் வாயிலாக உணர்த்துகின்றது. தமிழ் மக்கள், தமது நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் தமிழ்மொழி நெடுங்காலமாக உறுதுணையாக இருந்து வருவதை நன்கு உணர்ந்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் பாவேந்தர் பாரதிதாசன், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்ற எழுச்சிக் குரலை உரக்க எழுப்பியுள்ளார். காலப் போக்கும் தமிழ்க் காப்பும் தமிழின் இன்றியமையாமையை உணர்ந்து அதனைக் காலந்தோறும் காத்துத் தமிழ் மக்களை வாழவைத்ததில் பலர் பலவகையில் பங்கு கொண்டுள்ளனர். *இறையனார் களவியலுரை, தொடக்கம். |