பக்கம் எண் :

உரையாசிரியர்கள்52

     சங்க காலத்தில் மன்னர்கள் தமிழைக் காக்கும் பொறுப்பை
ஏற்றிருந்தனர். பல்லவர் காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழ்ப்
பணியை மேற்கொண்டனர். சோழர் காலத்தில் உரையாசிரியர்கள் தமிழின்
காவலராய் விளங்கினர். நாயக்க மன்னர்களின் காலத்தில் சிற்றரசர்கள்
தமிழுக்கு வாழ்வளித்தனர். ஆங்கிலேயர் காலத்தில் பலவேறு மதங்களுக்குரிய
மடங்களும், செல்வர்கள் நிறுவிய தமிழ்ச் சங்கங்களும் தமிழை வளர்த்தன.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், அரசியல் கட்சியினரும், தமிழார்வம் மிக்க
வள்ளல்களும் தமிழ்ப்பணி ஆற்றி வருகின்றனர்.

     இத்தனை கால கட்டங்களிலும் இடைக் காலத்தில் வாழ்ந்த
உரையாசிரியர்கள் தமிழுக்குச் செய்த தொண்டே மிகவும் உயர்ந்ததாகும்.

         ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
         நீரினும் நன்றதன் காப்பு.

என்று திருவள்ளுவர் உழவுத் தொழிலுக்குக் கூறிய அறிவுரை, தமிழ்ப்
பணிக்கும் பொருந்தும். தமிழ் நூல்கள் இயற்றுவதை விட அவற்றைக்
காப்பதே மிகவும் சிறந்த பணியாகும்.

     உரையாசிரியர்கள், தம் காலத்திற்கு முன்னர் இருந்த மன்னர்களும்,
சமயச் சான்றோர்களும் போற்றி வளர்த்த இலக்கிய இலக்கணங்களைக் காத்து,
அவற்றின் கருத்தை விளக்கிக் கூறித் தம் காலத்தவர்க்கும் தமக்குப் பின்னால்
வந்தவர்களுக்கும் அவற்றைத் தந்த பெருமைக்கு உரியவர்கள்.
அவர்களால்தான் பழந்தமிழ் நூல்கள் கால இருளைக் கடந்து வெளிச்சத்திற்கு
வந்தன; தமிழ் நூல்களில் உள்ள அரிய கருத்துகள் விளங்கின. பழந்தமிழ்
மரபும் பண்பாடும் புத்துயிர் பெற்றன. இலையுதிர் காலத்திற்குப்பின்,
தளிர்விட்டுப் பூத்துக் காய்த்துக் கனிதரும் பழ மரங்களைப் போல்,
இடைக்காலத்தில் உரையாசிரியர்களின் இடைவிடாத முயற்சியாலும், தொடர்
பணியாலும் பழந்தமிழ் புதுமை பெற்று மறுமலர்ச்சி அடைந்து கால
ஓட்டத்துடன் இணைந்து பயன் தந்தது.

உரையாசிரியர்களின் அரியபணி

     தமிழ் இலக்கிய வரலாற்றைக் கால வரிசைப்படி உற்று நோக்கினால்,
எல்லாக்காலங்களிலும் எல்லா நூல்களும் ஒரே நிலையில் மதிக்கப்பட்டுச்
சிறப்புடன் இருந்ததில்லை என்ற உண்மை புலனாகும்.