பக்கம் எண் :

உரையாசிரியர்கள்530

    சிதம்பர சுவாமிகள் - (18 ஆம் நூற்றாண்டு) - சாந்தலிங்க சுவாமிகளின்
மாணவர், உரை இயற்றிய நூல்கள்: வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம்,
அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது.

     திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி - ஆசிரியர்: அதிவீரராம
பாண்டியன். உரை இயற்றியவர்: நாகை. சொ. தண்டபாணிப்பிள்ளை.

     திருச்செந்தில் நிரொட்டக அந்தாதி. இயற்றியவர்; துறை மங்கலம்
சிவப்பிரகாசர். உரையாசிரியர் : ஆறுமுக நாவலர்.

ஞானாமிர்தம் - பழையவுரை

    ஞானாமிர்தம் என்ற நூலை வாசீகமுனிவர் இயற்றினார். இந் நூலிலிருந்து
பல பகுதிகளைச் சிவஞான முனிவர் சிவஞான பாடியத்தில் மேற்கோள்
காட்டிப் போற்றுகின்றார்.

     ஞானாமிர்தத்திற்குப் பழையவுரை ஒன்று உள்ளது. அதன் ஆசிரியர்
ஊர்பேர் எதுவும் தெரியவில்லை.

உரையின் இயல்பு

    ஒவ்வொரு பாட்டுரையின் இறுதியிலும் இலக்கணக் குறிப்பு எழுதுவது
இவரது வழக்கமாகும். இக் குறிப்புகள் சில ஏடுகளில் மிகுதியாக உள்ளன:
சிலவற்றில் குறைவாக உள்ளன: இக் குறிப்புகளும் பெரும்பாலும்
அசைநிலைகளை விளக்குகின்றன. சில இடங்களில் அருஞ்சொற்களுக்குப்
பொருள் கூறுகின்றார்.

     இவ்வுரையாசிரியர் நடை இலக்கியவளம் அற்றது. பாட்டின் பொருளை,
சிறிது கற்றவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவாக உள்ளது.

     மேற்கோள் முதலியன இவ்வுரையில் இல்லை. ஆகமக் கருத்துகளும்
இடம்பெறவில்லை. “பாட்டின் முறுக்கை அவிழ்த்துக் கண்ணழித்துப்
பொருள்காட்டும் திட்பமும் தெளிவும் நம் உள்ளத்தைக் கவர்ந்து
கொள்கின்றன.”

காலம்

    சிவஞான முனிவர் மாபாடியத்தில் இந்தப் பழையவுரையைச் சில
இடங்களில் மறுப்பதால் இவ்வுரை சிவஞான முனிவர்க்கு முற்பட்டது என்பது
விளங்கும்.