பதினைந்தாம் நூற்றாண்டில் சிற்றம்பல நாடிகள் சிவப்பிரகாசக் கருத்தரைச் சூத்திரம் என்ற நூலை இயற்றினார். திருவாவடுதுறைச் சங்கரமூர்த்தி தேசிகரின் சீடராகிய நல்லசிவதேவர், சிவப்பிரகாசச் சிந்தனை உரை எழுதினார். மதுரைச் சிவப்பிரகாசர், சத்திய ஞானப் பிரகாசர், சிதம்பரநாத முனிவர் ஆகியோர்களும் உரைகண்டுள்ளனர். சைவசித்தாந்த நூல்களுள் ஏனையவற்றிற்கும் உரை உண்டு. திருக்களிற்றுப் பாடியார்க்குச் சிவப்பிரகாசரும், இருபா இருபஃதுக்குத் திருவாவடுதுறைமடத்து நமச்சிவாயத் தம்பிரானும் (15 நூற்.), திருவருட்பயனுக்கு நிரம்ப அழகிய தேசிகரும், சங்கற்ப நிராகரணத்திற்குத் திருவொற்றியூர் ஞானப்பிரகாசரும் (16 நூற்.) உரை இயற்றியுள்ளனர். உண்மை விளக்கத்திற்குப் பழையவுரை ஒன்றும் உள்ளது. 4. சைவசாத்திர உரைகள் சைவ சாத்திர நூல்களுக்குக் காலந்தோறும் சைவ நூல்வல்ல அறிஞர்கள் உரை கண்டுள்ளனர். பௌட்கர ஆகமத்திற்கு உமாபதி சிவனார் (14- நூற்.) உரை இயற்றியுள்ளார். குகை நமசிவாயர் இயற்றிய நிட்டானுபூதி என்ற வீரசைவ சமய நூலுக்கு முத்து கிருஷ்ணபிரமம் உரை எழுதியுள்ளார். பதினாறாம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் வாழ்ந்த ஆதிசைவராகிய அகோரசிவாசாரியார், போசதேவரின் தத்துவப் பிரகாசிகைக்கும் மிருகேந்திர ஆகமத்திற்கும் உரை கண்டார். தாண்டவராய சுவாமிகள் (17-நூற்.) இயற்றிய கைவல்ய நீதம் என்ற நூலுக்கு அருணாசல சுவாமிகள் உரை செய்துள்ளார். கீழே சில ஆசிரியர் பெயரும் அவர்கள் இயற்றியுள்ள உரைகளும் தரப்படுகின்றன: ஒழிவில் ஒடுக்கம் - (252 வெண்பாக்கள்) இயற்றியவர் கண்ணுடைய வள்ளல் (18 நூற்.) உரையாசிரியர் - திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள். சின்மய தீபிகை: ஆசிரியர் - முத்தைய சுவாமி. உரை இயற்றியவர்: இராமானந்தயோகி (19- நூற்.) வேதாந்த சூடாமணி சித்தாந்தவுரை - சர்க்கரைப் புலவர் (1645-70). சோண சைலமாலை - இயற்றியவர்: துறைமங்கலம் சிவப்பிரகாசர், உரையாசிரியர்: கொ. இராமலிங்கத் தம்பிரான் |