சித்தியிலோர் விருத்தப் பாதிபோதும்’ என்று இதன் புகழைக் கூறுவர். உரைகள்: சிவஞான சித்தியார் ஞானாவரணம் என்ற ஒரு சொல், செய்யுள் வடிவில் சித்தியாருக்கு உரையாய்த் தோன்றியது. அந்த உரைக்கு உரையாக, பதினேழாம் நூற்றாண்டில் வெள்ளியம் பலத்தம்பிரான் சிவ ஞான சித்தியார் ஞானாவரணவுரை என்ற பெயரில் ஓர் உரை நூல் இயற்றினார். பதினாறாம் நூற்றாண்டில் சிவாக்கிரயோகிகள் சிவஞான சித்தியார் விருத்தியுரை எழுதினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவரும் ஆறுமுக நாவலருக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் வழங்கியவருமான சுப்பிரமணிய தேசிகர் சிவஞான சித்தியாருக்குப் பதவுரை இயற்றினார். சித்தியாரின் முழுமைக்கும் உரை எழுதாமல் ஏதேனும் ஒரு பகுதிக்கு உரை கண்டவர்களும் உண்டு. அவ்வுரைகளைக் காண்போம். பரபக்க உரைகள்: பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவொற்றியூர் ஞானப்பிரகாசர், தத்துவப் பிரகாசர், வேலப்ப (வேலுப்) பண்டாரம் ஆகியோர் பரபக்கத்திற்கு உரை இயற்றினர். சுபக்க உரைகள்: பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மறைஞான தேசிகர், நிரம்ப அழகிய தேசிகர், ஆறுமுக சுவாமிகள், பதினேழாம் நூற்றாண்டினரான (திருவண்ணாமலை ஆதீனம்) ஞானப்பிரகாச (முனிவர்) தேசிகர், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவர் ஆகியோர் சுபக்கத்திற்கு உரை எழுதியுள்ளனர். சிவஞான சித்தியாருக்கு முதன் முதலில் உரை கண்டவர் நிரம்ப அழகிய தேசிகர். அவரைப் பின்பற்றி, சிவகொழுந்து ஆசாரியர் உரை இயற்றினார். மறைஞான தேசிகர் சித்தியார் உரைப்பாயிரமாக, ஓராது எழுதினேன் ஆயினும் ஒண்பொருளை ஆராய்ந்து கொள்க அறிவுடையார்-சீராய்ந்து குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன் என்ற வெண்பாவை இயற்றியுள்ளார். சிவப்பிரகாச உரைகள்: சிவப்பிரகாசத்திற்குப் பலர் உரை இயற்றியுள்ளனர். அவர்களுடைய காலம் வரலாறு ஆகியவற்றை அறிய இயலவில்லை. |