இயற்றிய நன்னூல் காண்டிகை உரைகள் தமிழ்கற்கும் மாணவர்களுக்காக எழுதப் பட்டவை. 2. மயிலைநாதர் நன்னூலுக்கு முதன்முதலில் உரை எழுதிய பெருமை மயிலைநாதரைச் சாரும். இளம்பூரணருக்குரிய சிறப்புகள் யாவும் இவருக்கும் உரியவையாகும். தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்களில் நன்னூல் தமிழ்மொழி மரபைக் காத்தது எனில், அந் நூலினை நன்கு தெளிந்து, நூலாசிரியர் கருத்தை அறிந்து காலத்திற்கு ஏற்ற புதுக் கருத்துகள் கூறிய பெருமை மயிலைநாதருக்கு உண்டு. தொல்காப்பியர் கொள்கையிலிருந்து, நன்னூலார் தம் காலத்திற்கு ஏற்ற திருத்தங்களைச் செய்து, பழையன நீக்கிப் புதியன ஏற்றார் எனில் நன்னூலாரின் ஆக்கத்திறனை உலகறியச் செய்தவர் மயிலைநாதர் என்னலாம். புதிய நூலின் போக்கை அறிந்து முதன்முதலில் உரை வகுப்பது என்பது அத்துணை எளிய செயல் அன்று. அவ்வாறு செய்தவர், பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்கும் திருப்பணியைச் செய்தவர் என்னலாம். பழையன நினைந்து, புதியன பேணி இலக்கண நெறியினைக் காக்கும் உரையாசிரியரின் பணி மிகப் பெரியதாகும். மயிலைநாதர் சிற்சில இடங்களில் உரைப்பாரும் உளர்; கூறுவாரும் உளர் என்று குறிப்பிடுவதால் இவருக்கு முன்னும் வேறு ஏதேனும் உரை நன்னூலுக்கு இருந்ததோ என்ற ஐயம் எழுகின்றது. வரலாறு மயிலைநாதர் சமணசமயத்தைச் சேர்ந்தவர். மயிலை என்ற பெயர், இப்போது மயிலாப்பூர் என வழங்குகின்றது. மயிலையில் முன்பு இருந்த சிவாலயத்தில் எழுந்தருளி இருந்த 22ஆம் தீர்த்தாங்கரரான நேமிநாதருடைய திருநாமம் ஆகும். இவ்வுரையாசிரியர், சமண சமயக் கருத்துகளைப் பல இடங்களில் எடுத்துக்காட்டுகின்றார்: அச் சமய நூல்களிலிருந்து பல மேற்கோள்கள் தருகின்றார்: அருகதேவனைப் பெரிதும் போற்றுகின்றார். இவர், நன்னூலை ஆக்குவித்த சீயகங்கன் காலத்திலோ அவன் வழித்தோன்றல்களின் காலத்திலோ வாழ்ந்திருந்தார் என்று கருதத்தக்க சான்றுகள் சில உள்ளன. |