இவ்வுரை பதினேழாம் நூற்றாண்டு வரை (ஏறத்தாழ நானூறு ஆண்டுகள்) செல்வாக்குப் பெற்று விளங்கியது. சமணர் இயற்றிய உரையைச் சைவர்கள் கற்கத் தயங்கினர். சமணச்சார்புடைய உதாரணங்களையும் மேற்கோள் பாடல் கலையும் கற்கும்போது விருப்பமின்றிக் கற்றனர். இத்தகைய எதிர்ப்புணர்ச்சி, பதினேழாம் நூற்றாண்டில் நன்னூலுக்குப் புதிய உரை ஒன்று தோற்றுவிக்கும் எண்ணத்தைச் சைவ உலகில் உண்டாக்கிற்று. இலக்கணக் கொத்தின் ஆசிரியர், “சேற்று நிலத்தில் கவிழ்ந்த பால், தேன், நெய் முதலியனவும் சேறானாற்போல், நன்னூற் சூத்திரமும் அவ்வுரையுடனே கலந்து குற்றப்பட்டது என்க” என்று மயிலைநாதர் உரையைக் கடிந்தார்; தம் மாணவராகிய சங்கர நமச்சிவாயரை நன்னூலுக்கு வேறுரை எழுதுமாறு தூண்டினார். சங்கரநமச்சிவாயர் சைவ சித்தாந்தங்களையும் திருமுறைகளையும் நன்கு ஓதி உணர்ந்தவர். நன்னூலுக்கு உரைஎழுதத் தொடங்கி, தம் உரை எங்கும் சைவமணம் கமழும்படி செய்தார். மேற்கோளும் உதாரணமும் சைவ சமயச் சார்புடையனவாகக் காட்டினார். இவ்வுரை தோன்றியபின், மயிலைநாதர் உரை செல்வாக்கிழந்து ஒதுங்கியது. சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு இயற்றிய விருத்தியுரை எங்கும் பரவியது. சங்கர நமச்சிவாயருக்குப்பின் தோன்றிய சிவஞானமுனிவர், நன்னூல் விருத்தியுரையில் சில இடங்கள் போதிய அளவு விளக்கம் இல்லாமல் இருப்பதை உணர்ந்து புதிய பகுதிகள் பலவற்றை எழுதி, விருத்தியுரையின் நடுவே சேர்த்துப் புதுக்கினார். சிவஞானமுனிவர் புதுக்கிய உரை ‘புத்துரை’ என்ற பெயருடன் இலக்கண ஆராய்ச்சி நூலாய்ச் செல்வாக்குப் பெற்று விட்டது. சங்கர நமச்சிவாயர் உரையையும் வென்று அவ்வுரை விளங்குகின்றது. சிவஞான முனிவரின் விருத்தியுரை இருநூறு ஆண்டுகள் தனிப்பெருமையுடன் ஒப்பும் உயர்வும் இன்றி விளங்கி வந்தது. 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இலக்கணம் கற்கும் மாணவர்களுக்கு ஏற்ற எளிய இலக்கண நூல்கள் தேவைப்பட்டதால் பலர் நன்னூல் விருத்தி யுரையைத் தழுவி, சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் காலத்திற்கேற்ற பல புதிய உதாரணமும் மேற்கோளும் தந்து காண்டிகை யுரைகளை இயற்றினர். முகவை இராமாநுசக் கவிராயர், ஆறுமுக நாவலர், விசாகப் பெருமாள் ஐயர், சடகோபராமாநுசாச்சாரியார், பவானந்தம் பிள்ளை ஆகியோர் |