10 நன்னூல் உரையாசிரியர்கள் 1. நன்னூல் உரைகள் தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய இலக்கண நூல்களுள், பவணந்தியார் இயற்றிய நன்னூலே தலைமையும் செல்வாக்கும் பெற்றுச் சிறந்து விளங்குகின்றது. சுருக்கமும் செறிவும் இந்நூலின் தனிச் சிறப்பியல்புகளாகும். இந் நூலிலிருந்து இலக்கண விளக்க ஆசிரியர் 250 சூத்திரங்கள் வரை எடுத்துத் தம் நூலில் சேர்த்துள்ளார். இலக்கணக் கொத்தின் ஆசிரியராகிய சாமிநாத தேசிகர் “முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ என்னும் துணிவே மன்னுக” என்று வாயாராப் புகழ்கின்றார். நேமிதா தத்தால் நிலைதெரியாச் சொற்புணர்ச்சி காமர் நன்னூற் சூத்திரத்தாற் காட்டிடீர் என்று திருத்தணிகையுலா போற்றுகின்றது. பவணந்தியார் சமணத் துறவி. சனகை என்னும் ஊரில் பிறந்தவர். சீயங்கன் என்னும் குறுநில மன்னன் வேண்டுகோளின்படி, பவணந்தியார் நன்னூலை இயற்றினார். சீயகங்கன் மூன்றாம் குலோத்துங்கனுக்கு (1178-1216) உட்பட்ட சிற்றரசன். எனவே, நன்னூலார் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். நன்னூலுக்குக் காலந்தோறும் பல உரைகள் தோன்றியுள்ளன. ஒவ்வோர் உரைக்கும் ஏதேனும் தனிப்பட்ட சிறப்பியல்பு இருக்கின்றது. நன்னூலுக்கு முதன் முதலில் தோன்றிய உரை மயிலைநாதர் உரையேயாகும். மயிலைநாதர் நன்னூலார் காலத்தை அடுத்துத் தோன்றியவர். இவர் நன்னூலார் கருத்தை ஒட்டி உரைசெய்து, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார். இவ்வுரையைக் காண்டிகையுரை என்றும் வழங்கினர். மயிலைநாதர் சமணர் ஆதலின், இவரது உரையில் சமணச் சார்பான மேற்கோளும் உதாரணமும் இடம் பெற்றுள்ளன. |