பக்கம் எண் :

உரையாசிரியர்கள்558

     ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்’ (403) என்பதற்கு
மயிலைநாதர், ‘உலகத்துப் பொருள்கள் எல்லாம் இயற்கைப் பொருளும்
செயற்கைப் பொருளும் என இரு வகையவாம். அவற்றுள், இயல்பாக
வராநின்ற பொருளைச் சொல்லுமிடத்து இத்தன்மையது என்று சொல்ல
வேண்டும்’ என்று உரை கூறுகின்றார்.

    துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
    உய்த்தல் ஆதி உடல்உயிர்த் தொழிற்குணம்        - 452

என்ற சூத்திரத்திற்கு இவர், பின்வருமாறு விரிவாக உரை எழுதுகின்றார்.

     ‘மெய், வாய், மூக்கு கண், செவி என்னும் ஐம்பொறிகளானும் ஊறு,
சுவை, நாற்றம், ஒளி, ஒலி என்னும் ஐம்புலன்களையும் நுகர்தலும்;
உறங்குதலும், பிறரைத் தொழுதலும், வேண்டினவற்றை அணிதலும்;
மடைத்தொழில், உழவு வாணிகம், கல்வி, எழுத்து, சிற்பம் என்னும் ஆறு
தொழில்களையும் முயல்தலும் இவை போல்வன பிறவும் உடம்போடு கூடிய
உயிர்த் தொழிற் பண்பாம்.’

    பல்வகை வடிவுஇரு நாற்றம்ஐ வண்ணம்
    அறுசுவை ஊறுஎட்டு உயிரல் பொருட்குணம்    - 453

என்று சூத்திரத்திற்கு நல்ல விளக்கமாய், பின்வரும் மயிலை நாதர்
உரைப்பகுதி அமைகின்றது;

     “சதுரம், ஆய்தம், வட்டம், முக்கோணம், சிலை, துடி, தோரை, முழா,
எறும்பு, கூன், குறள் முதலான வடிவுகளும்,

     நன்றும் தீதும் ஆன இருவகை நாற்றமும்,

     வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை ஆன ஐந்து
வண்ணங்களும்,

     கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காழ்ப்பு, தித்திப்பு என்னும் ஆறு
சுவைகளும்,

     வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, திண்மை, நொய்மை,
இழும்எனல், சருச்சரை என்னும் எட்டு ஊறும் உயிரில்லாத பொருட்பண்பாம்.”

இலக்கணக்குறிப்பும் ஆராய்ச்சியும்

    “முற்காலத்திற் கண்ட இலக்கியங்கட்கே இலக்கணம் இயம்பலின்” (140)
என்று இவர் குறிப்பிடுவதால், இலக்கணம் பற்றி இவர் கொண்ட கருத்துத்
தெளிவாகின்றது.