பக்கம் எண் :

559ஆய்வு

     இலக்கணச் சூத்திரங்கள் நிற்கும் நால்வகையினைக் குறித்துப்
பின்வருமாறு விளக்கம் எழுதுகின்றார்:

     “ஆற்றுஒழுக்கு என்பது, ஆற்றுநீர் தொடர்பறாது ஒழுகுமாறு போலச்
சூத்திரங்களும் தம்முள் இசைபுட்டொழுகுவது. அரிமாநோக்கம் என்பது
சிங்கநோக்கம். சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரையும்
நோக்குவதுபோல இறந்த சூத்திரத்தினோடும் எதிர்த்த சூத்திரத்தினோடும்
இயைபுபடக் கிடப்பது. தவளைப்பாய்த்தென்பது, தவளை பாய்கின்றவிடத்து
இடையிடை நிலம் கிடப்பப் பாய்வதுபோலச் சூத்திரம் இடையிட்டுப் போய்
இயைபு கொள்ளுவது. பருந்தின் விழுக்காடு என்பது பருந்து நடுவே விழுந்து,
தான்கருதும் பொருளை எடுத்துக் கொண்டு போவதுபோல இதுவும்
முடிக்கப்படும் பொருளை முடித்துப்போம் இயைபினது” (18).

     அகரம் முதலில் வைக்கப்பட்டதற்கு இவர்கூறும் காரணம் சுவையானது:

     “அகரம் தானே நடந்தும், நடவா உடம்பை நண்ணியும் நடத்தலானும்,
அரன், அரி, அயன், அருகன் என்னும் பரமர் திருநாமத்திற்கு ஒரு
முதலாயும், அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளின்
முதற்பொருட்கும், அருள், அன்பு, அணி, அழகு முதலாயின நற்பொருட்கு
முதலாயும் வருதலானும் முன் வைக்கப்பட்டது” (72).

     ‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை’(260) என்னும் சூத்திரத்தின்
கீழ் மயிலைநாதர், “தேவரை முன்வையாது இவ்வாறு வைத்த காரணம்
என்னையோ எனின், மக்களுள் பிறந்தே தானமும் தவமும் இயற்றி வானமும்
வீடும் எய்தற் சிறப்பினான் முன்னே மக்களையும் அவ்வாறல்லது எய்தற்கு
அருமைச் சிறப்பினான் அவர்பின்னே தேவரையும், தீவினையால் வருதல்
இழிபினான் அவர்பின்னே நரகரையும் வைத்தார் என்க” என்று எழுதுகின்றார்.

     அவன், அவள், அவர் என்பவை பகாப்பதம் என்பது இவர் கருத்து:

     “அவன், அவள், அவர் என்றற்றொடக்கத்தன ஈறு பகுக்க வேறு பால்
காட்டலின் பகுபதமாம்பிற எனின், அவை ஒன்றாய் நின்று ஒருபொருள்
ஆவதல்லது ஈறுபிரித்தாற் பகுதிவேறு பொருள்படாமையின், அவற்றிற்குப்
பகுதி விகுதித்தன்மை இன்மையின் ஆகா என்க” (130).

     ‘இறப்பு, எதிர்வு, நிகழ்வு எனக் காலம் மூன்றே’ (381) என்னும் சூத்திர
உரையில் காலத்தைப்பற்றி, பலவேறு கொள்கைகளை விளக்குகின்றார்: