இவன் மானேந்தி, இவன் பிறைசூடி இவன் கங்கையாடி. (இலக்-83) சுவையான மேற்கோள் இவரது உரையில் பல சுவையான மேற்கோள்கள் இடம் பெற்றுள்ளன. “உள்ளங்கையில் உரோமம் முளைத்ததாயின் அறிவிலான் அடங்குவன்” என்பது ஓர் உதாரணம். “இத்தகடு பேயோட்டி” என்பது மற்றோர் உதாரணம். பொய்யுரைக்குப் பின்வரும் உதாரணத்தைக் காட்டுகின்றார்: ஒப்பிலா மலடி பெற்ற மகன்ஒரு முயற்கொம்பு ஏறி தப்பில்ஆ காயப் பூவைப் பறித்ததை சாற்றி னாரே! முதலியன எல்லாம் பொய்யுரை. சொல்லும் பொருளும் ஆரியன் என்ற சொல்லை இவர் ஆசிரியன் என்ற பொருளில் பயன்படுத்துகின்றார். “பகவற்குப் பாடி ஆடினான் பாகவதன்; வடக்கினின்றும் வந்தவன் வடமன்” (இலக்-117) என்பது இவர் தரும் விளக்கம். வேறுபாடு வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை, “இரு திணையும் ஆண்பால் பெண்பால் வினைஈறும் வடமொழிக்கு இல்லை. மூன்று இலிங்கமும் முதலீற்று வேற்றுமைகட்கு உருபுகளும் தமிழிற்கு இல்லை” என்று கூறுகின்றார் (இலக்-7). வடமொழிப் பற்று வடமொழிப் பற்றும் புலமையும் மிக்க இவர் தமிழின் தனித் தன்மையை மறந்து விட்டார். இரு மொழியும் வேறு வேறு இயல்புடையவை என்ற உண்மையைப் புறக்கணித்தார். தமிழால் அறிய முடியாத செய்திகளை வடமொழி பயின்றால் அறிந்து கொள்ளலாம் என்பது இவரது கொள்கை: பலகாற் பழகினும் தெரியா உளவேல் தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார் |