பக்கம் எண் :

உரையாசிரியர்கள்642

ஒருபாடை, எப்படித் தனிமொழி ஆகும்?” என்று வீறாப்புடன் அவர்
வினவினார், தமிழைப் பழித்து அவர் தமிழிலேயே எழுதத் துணிந்தார்”

புலவரைப் போற்றுதல்

    வடமொழிப்பற்று மிகுந்த இவர், தமிழ்ப் புலவர்களைப் போற்றிப்
புகழும் இடங்களும் உண்டு.

    பல்காற் பழகினும் தெரியா உளவேல்
    தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்
    மூன்றினும் முழங்கும்

என்றும், “இலக்கணமாவது தொல்காப்பியம் ஒன்றுமே, செய்யுளாவது
திருவள்ளுவர் ஒன்றுமே” என்றும் போற்றுகின்றார் (இலக்-7).

     பிழை செய்வது மனித இயல்பு என்றும், அதனைப் பொறுப்பது
ஆன்றோர் கடன் என்றும், முன்னோர் நூலில் பிழை இருப்பினும்
போற்றுதல் வேண்டும் என்றும் கூறுகின்றார்.

    நூலா சிரியர் கருத்தினை நோக்காது
    ஒருசூத் திரத்திற்கு ஒவ்வொரா சிரியர்
    ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே

என்றும்,

    நூலுரை போதகா சிரியர் மூவரும்   
    முக்குண வசத்தால் முறைமறந்து அறைவரே
                                       (இலக்-6)

என்றும் இவர் உலகிற்கு அறிவுரை கூறகின்றார். மற்றோர் இடத்தில்,
“இறைவன் நீங்கலான எல்லா ஆசிரியர்க்கும் ‘மறவி இனைய உடல் கொள்
உயிர்க் குணம்’ என்பதனாற் பொது.  அவரவர் மறவிகளை விரிக்கின்
பெருகுதலானும், அறிதல் அருமையானும், பெரியோர்க்குக் குற்றம் கூறினான்
என்னும் குற்றம் வருதலானும் விரித்திலம் என்க” (இலக்-89) என்று
உரைக்கின்றார்.

     நன்னூலாரை இவர் பெரிதும் போற்றி மதிக்கின்றார். ‘சேற்று நிலத்தி்ல்
கவிழ்ந்த பால் தேன் நெய் முதலியனவும் சேறு ஆனாற்போல, நன்னூல்
சூத்திரமும் அவ்வுரையுடனே கலந்து குற்றப்பட்டது என்க. முன்னூல் ஒழியப்
பின்னூல் பலவினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ என்னும்
துணிவே மன்னுக” (இலக்.-8) என்று இவர் கூறி நன்னூலாரைப் புகழ்கின்றார்.