1. உரையாசிரியர் பரம்பரை இலக்கண இலக்கிய நூல்களை முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்று ஒன்றோரு ஒன்றைத் தொடர்புபடுத்திக் காட்டுவது வழக்கம். யாப்பருங்கல விருத்தியுரை, தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார் பல்காய னார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தம் நூலுள் தொகுத்து என்ற செய்யுளில் பண்டைய நூல்களைத் தொடர்புபடுத்திக் காட்டுகின்றது. இவ்வாறே உரை நூல்களையும் தொடர்புபடுத்தலாம். உரையாசிரியர்களின் பரம்பரையை அமைக்கலாம். ‘முதல் உரையாசிரியர் யார்? அவரைப் பின்பற்றுபவர் யார் யார்? எந்த எந்த வகையில் பின்பற்றுகின்றனர்? முதல் உரையாசிரியரின் கொள்கையிலிருந்து எங்கெங்கே விலகித் தனி வழி வகுத்துச் செல்லுகின்றனர்?’ என்று காண்பது சுவை மிகுந்த ஆராய்ச்சியாக இருக்கும். களவியல் உரையாசிரியர், இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், பரிமேலழகர், ஆகிய உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒரு பரம்பரையை உண்டாக்கி அதற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லுகின்றனர். நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு உரை எழுதியவர்கள், திருக்குறள் உரையாசிரியர்கள், சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கு உரை கண்டவர்கள் ஆகியவர்களுக்குள்ளும் பரம்பரைத் தொடர்பு காணலாம். யாப்பு நூல், பாட்டியல் நூல் ஆகியவற்றின் உரையாசிரியர்களுள்ளும் பரம்பரைத் தொடர்பு உண்டு. களவியல் உரையாசிரியர் உரைகளில் களவியல் உரையே தொன்மையானது. அவ்வுரையை ‘முதல்உரை’ என்னலாம். அது, பல ஆண்டுகள் வாய்மொழியாக வழங்கி வந்து - ஒன்பது தலைமுறைகளுக்குப் பின்னர், எழுத்து வடிவம் பெற்றது. ஆதலின், அவ்வுரையை ‘முதல் உரை’ என்று கூறுவது மிகவும் பொருந்தும். முதல் உரையாகிய அவ்வுரை பல உரைகளைத் தோற்றுவிப்பதாய் ஆயிற்று. தனக்குப் பின்னால் தோன்றிய உரைகளுக்கு வழிகாட்டியாயிற்று. பாயிரக்கருத்து உரைத்தல், சொற்பொருள் விரித்தல், தமிழ் மரபு பேணுதல், இலக்கணத் குறிப்புத் தருதல், பழைய பாடல்களை |