மேற்கோள் காட்டுதல், வினா விடை முறையில் பொருளை விளக்குதல், செய்யுள் நடையில் உரைநடை எழுதுதல், எந்தக் கருத்தையும் தெள்ளத் தெளியக் கூறுதல் போன்ற பல வழிகளில், பிற்கால உரையாசிரியர்களுக்கு அவ்வுரை வழிகாட்டியது. அவ்வுரையை ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு உரையாசிரியர் பின்பற்றினர். களவியல் உரையின் பாயிரக் கருத்து, தமிழ் மரபு, கருத்துத் தெளிவு, இலக்கணக்குறிப்பு ஆகியவற்றை இளம்பூரணர் பின்பற்றி, தமக்கென ஒரு தனி வகையான நடையை அமைத்துக்கொண்டார். திருக்கோவையாருக்கு உரை எழுதிய பேராசிரியர் களவியல் உரையின் செய்யுள் போன்ற உடைநடை, வினாவிடை முறை, சொற்பொருள் விளக்கம், நயங்கூறல், அகத்திணைக் கருத்தை விளக்கல் ஆகியவற்றைப் பின்பற்றினார். தஞ்சைவாணன் கோவைக்கு உரை எழுதிய சொக்கப்ப நாவலர் களவியல் உரையின் உரைநடையைக் கையாண்டார்; அகத்திணைக் கருத்தை மேற்கொண்டார்; நயங்கூறும் முறையைப் பின்பற்றினார். இளம்பூரணர் இளம்பூரணர், களவியலுரையைச் சில வகையில் பின்பற்றினாலும் தொல்காப்பியத்திற்கு முதன்முதலில் உரை இயற்றித் தமக்கெனத் தனிச் சிறப்பும் தலைமையும் பெற்று விளங்குகின்றார். தொல்காப்பிய உரையாசிரியர்களுக்குப் பிற்கால இலக்கண உரையாசிரியர்களுக்கும் அவரே தலைவர் என்னலாம். மயிலைநாதர், நேமிநாத உரையாசிரியர், நம்பி அகப்பொருள் ஆசிரியர் (ஆசிரியரே உரை எழுதியுள்ளார்) ஆகியோர் அவரைப் பின்பற்றுகின்றனர். களவியல் உரையின் செய்யுள்நடையை இளம்பூரணரிடம் காணமுடியவில்லை. தொல்காப்பியப்பாயிர விளக்கத்தில் அத்தகைய நடை சில இடங்களில் ஒளி வீசுகின்றது. தெளிவும் அமைதியும் அடக்கமும் இவரது உரையின் தன்மைகள். இவை யாவும் இவரைப் பின்பற்றிய உரையாசிரியர்களிடம் அப்படியே சென்று படிந்துள்ளன. சேனாவரையர் இளம்பூரணரை அடுத்துத் தோன்றிய சேனாவரையர், தமக்கென ஒரு புதிய மரபை உண்டாக்கித் தலைமை தாங்குகின்றார். அவர் இட்ட வித்துகள் பல உரையாசிரியர்களைத் தோற்றுவித்தன. தருக்க நூலறிவோடு மறுக்கும் திறன், |