ஆழ்ந்த வடமொழிப் புலமை, தமிழுக்கும் வடமொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்ற கொள்கை, செறிவு மிகுந்த உரைநடை எழுதும் ஆற்றல், நுட்பமான கருத்து வெளிப்பாடு, சுருங்கச் சொல்லி உய்த்து உணரும் வகையில் விளக்குதல் ஆகியவை சேனாவரையரிடம் காணும் தனித்தன்மைகளாகும். சேனாவரையரின் உரைத்தன்மையைப் பின்பற்றித் திருக்குறளுக்கு உரை எழுதினார் பரிமேலழகர். பரிமேலழகரின் உரையில், சேனாவரையர் உரையின் இயல்புகள் பலவற்றைக் காணலாம். வடமொழி இலக்கணக்கொள்கைகளைத் தமிழோடு தமிழாக்கிக் கூறி இரு மொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்று சேனாவரையர் வகுத்த புதுக்கொள்கை பிற்காலத்தில் பெருகி வளர்ந்தது. வீரசோழியம், பிரயோக விவேகம். இலக்கணக் கொத்து ஆகிய நூல்களும் உரைகளும் சேனாவரையாரின் புதுக்கருத்தை வளர்த்து, பல பொருந்தாத கொள்கைகளைத் தமிழ்மொழி இலக்கணத்தில் புகுத்திவிட்டன. இந்நூல்களும் உரைகளும் அறிஞர்களால் காலந்தோறும் கண்டிக்கப்பட்டு வருகின்றன. பரிதிமாற்கலைஞர், தமிழ் மொழியின் வரலாறு என்ற நூலில் (ஐந்தாம் பதிப்பு, பக்கம் 32), “இலக்கணக் கொத்து “நூற்பாயிரத்தின்கண் கூறிய சில கூற்றுக்கள் அறிவுடையோர் ஒதுக்கற்பாலன” என்றும், “மொழி நூலாராய்ச்சியும் அறிவும் இல்லாததால் ஏற்பட்ட குறைபாடு” என்றும், “பொருந்தாக் கூற்று” என்றும், அக்கருத்துக்களைப் “பேரளிவாளர் நகைத்து விடுப்பர்” என்றும் கூறியுள்ளார். சேனாவரையர் பரம்பரையில் தோன்றி மிக்கபுகழுடன் விளங்குபவர், சிவஞானமுனிவர். அவர், தம் பரம்பரைக்குத் தலைவராய் விளங்கும் சேனாவரையரை “வட நூற்கடலை நிலைகண்டு உணர்ந்த சேனாவரையர்” என்று வாயாரப் போற்றிப் புகழ்கின்றார். தலைவரின் புகழ் பாடிப் பரவும் மனநிலை சிவஞான முனிவரிடம் உள்ளது. தம் பரம்பரைக்குரிய தலைவனைக் கண்டு வணங்கிய பெருமை அவருக்கு உண்டு சேனாவரையரைத் தவிர மற்ற எவரையும் பொருட்படுத்தாத - மதிக்காத போக்கு அவரிடம் உண்டு. சேனாவரையர் பரம்பரை, வளர்த்து வந்த உரைநடை முழு வளர்ச்சி பெற்று ஒப்புயர்வற்று விளங்குவது, சிவஞான முனிவரின் நூல்களில்தான். அந்நடை, முனிவரின் நூல்களில் தான் உச்சநிலையை அடைந்தது. |