சேனாவரையரிடம் காணப்படும் இயல்புகளாகிய பிறர் எவரும் எளிதில் மறுத்துவிட இயலாதபடி விளக்கிச் செல்லும் முறையும், பிறர் கருத்தை மிக வன்மையாய் - தருக்க நூலறிவுடன் மறுக்கும் திறனும் சிவஞான முனிவரிடம் மிகுதியாக உள்ளன. சேனாவரையரைவிடப் பிறரைத் தாக்குவதில் மிக்க உணர்ச்சியும் ஊக்கமும் உடையவராய்ச் சிவஞானமுனிவர் விளங்குகின்றார். சேனாவரையர் நடையைப் பின்பற்றிய போதிலும், குறைந்த சொற்களால் நிறைந்த பொருளை விளக்குவதில் சேனாவரையரைச் சிவஞான முனிவர் வென்றுவிட்டார் என்றே கூறலாம். இத்தகைய பல சிறப்பியல்புகள் கொண்ட சிவஞான முனிவரிடம், பரம்பரைப் பண்புகளும் காணப்படுகின்றன. வடமொழி இலக்கணத்தைத் தமிழில் கொண்டு புகுத்துதல், இருமொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்று கருதல், வடமொழிப் புலமை இன்றேல் தமிழ் இலக்கண அறிவு நிரம்பப்பெறாது என்று நினைத்தல் போன்ற பரம்பரைப் பண்புகள் சிவஞான முனிவரிடம் உள்ளன. பேராசிரியர் சேனாவரையருக்குபின் வந்த தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர், தமக்கென ஒரு பரம்பரையைத் தொடங்கித் தலைமை தாங்குகின்றார். தொல்காப்பியப் பொருளதிகார உரையில் பல்கலைப் புலமையைக் காணலாம். நாடகம், இசை, தருக்கம், சோதிடம், ஆகிய பலவகையான கலைகளின் இருப்பிடமாய் இவர் உரை விளங்குகின்றது. இவர் உரையில் சமயநூல் கருத்துக்கள் ஆங்காங்கே பளிச்சிடும்; வளமான இலக்கியப் புலமை வெளிப்படும்; இலக்கண அறிவு தோன்றும்; வடமொழிப் புலமையும் தேவையான அளவு நிறைந்திருக்கும். இவற்றிற்கும் மேலாக தூய இனிய வளமான தமிழ்நடை இன்னிசையோடு தவழ்ந்துவரும்; இலக்கியச்சுவை கனிந்து இன்பமூட்டும். அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், தக்கயாகப் பரணி உரையாசிரியர் ஆகியோர் இப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பல்கலைச் செல்வராய் விளங்குகின்றனர். இவர்களுடைய உரைநூல்களைக் கலைக் களஞ்சியம் என்னலாம். பரிமேலழகரிடம் காணப்படும் பல்கலைப் புலமை இப் பரம்பரைத் தொடர்பால் ஏற்பட்டதேயாகும். |