மணிப் பிரவாளப் பரம்பரை நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களுக்கு வியாக்கியானங்கள் எழுதிய உரையாசிரியர்களைப்போல, ஏனைய தமிழ் இலக்கியங்கள் பலவற்றிற்கும் சிலர் உரை கண்டனர். வியாக்கியான உரையாசிரியர்களைப் போலவே வடமொழிச் சொற்களையும் பேச்சு மொழியையும் கையாண்டு, சொற்பொழிவு செய்யும் முறையில் உரைகளை இயற்றினர். அவ்வுரைகளில கொச்சை மொழிகளும், நாட்டுக்கதைகளும் பழமொழியும் மரபுத்தொடரும் மிகுதியாக இடம் பெறுகின்றன. திருக்கோவையாருக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர், நீலகேசிக்கு உரை வடித்த சமய திவாகரவாமன முனிவர், திருக்குறக்கு உரை எழுதிய பரிதி, புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியர், மூவருலாவின் பழைய உரையாசிரியர், தக்கயாகப் பரணி உரையாசிரியர் ஆகியவர்கள் இப்பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவ்வுரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு மொழி, பழக்கவழக்கம், சமுதாய நிலை, நாட்டின் போக்கு ஆகியவற்றை அவ்வுரைகள் மிகத்தெளிவாக எதிரொலிக்கின்றன. பேசுவதுபோலவே எழுதும் உரைநடையிலும் ஒருவகை இன்பமும், எழிலும், உயிரோட்டமும் இருப்பதைக் காணலாம். தழுவல் உரைகள் சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோர் உரை எழுதிச் சென்றபின், எல்லா உரைகளிலிருந்தும் தமக்குப் பிடித்தமான கருத்துக்களைத் திரட்டி ஒருவகை உரையினைக் கல்லாடனார் இயற்றியுள்ளார். சொல்லதிகாரத்திற்குப் பழையவுரை ஒன்றும் உள்ளது. அதுவும் மற்ற உரைகளைத் தழுவியே அமைந்துள்ளது. சிறந்த உரைகளுக்குப் பின் தோன்றிய போதிலும் இவ்வுரைகள் விளக்கம் உடையனவாய் - முன்னைய உரைகளை வென்று விளங்கும் தன்மையுடையனவாய் இல்லை. பல உரைகளிலிருந்து நல்லனவற்றை எல்லாம் அல்லது தாம் விரும்புவனவற்றை எல்லாம் திரட்டிச் சுருக்கமாகத் தரும் முயற்றி பிறகாலத்தில் எழுந்தது. சிவஞானமுனிவர்க்குப் பின் தோன்றிய நன்னூல் உரைகளும், திருக்குறளுக்கும் தொல்காப்பியத்திற்கும் உரிய பல உரைகளும் அச்சான பின்னர், இவ்விரு நூல்களுக்கும் தோன்றிய எளியவுரைகளும் தழுவல் உரைகளே. |