பக்கம் எண் :

உரையாசிரியர்கள்678

     தழுவல் உரை இயற்றியவர்களிடம் தமக்கென ஒருவகைத்
தனிப்பண்பையோ, கருத்தையோ காணமுடியவில்லை. அவ்வுரையாசிரியர்கள்
எல்லாரும், பிறர்காலில் நிற்பவர்கள்; பல நிறமுடைய காகிதப் பூக்ககளைத்
திரட்டி மகிழ்பவர்கள்.

மரமும் கிளையும்

    ஒரு நூலுக்கு அல்லது ஒரே வகையான நூலுக்கு உரை எழுதியவர்கள்
பலர் உள்ளனர். ஒருவருக்குப்பின் ஒருவராகத் தோன்றி, ஒருவர் எழுதியதற்கு
மற்றவர் விளக்கம் எழுதி ஒருவகைப் பரம்பரையைத் தமக்குள் அவர்கள்
ஏற்படுத்திக் கொண்டனர்.

     தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார், திருவாய்மொழி, திருவாசகம்,
நன்னூல் ஆகிய நூல்களுக்கு உரை கண்டவர்கள் முதன் முதலில் உரை
எழுதியவர் வகுத்துத் தந்த வழியில் அமைத்துத்தந்த பாதையில் சென்றனர்.
அடி மரத்திலிருந்து கிளையும், கிளையிலிருந்து கொம்பும், கொம்பிலிருந்து
மிலாரும் (விளாரும்) பிரிவதுபோல ஒன்றற்கு ஒன்று விளக்கமாய் ஒரே
நூலுக்கு விளக்கமாய் உரைகள் பெருகி வளர்ந்துள்ளன.

     இவையேயன்றிச் சைவ சாத்திரங்களுக்கும் யாப்பிலக்கணம்
அணிலிக்கணம், பாட்டியல் நூல்கள் ஆகிய நூல்களுக்கும்
உரைகண்டவர்களிடம் ஒருவகை மரபுநிலை தென்படுகிறது; உரைகளில் சில
பரம்பரைகள் தெரிகின்றன.

தொல்காப்பியப் பாயிர ஆராய்ச்சி

    தொல்காப்பியப் பாயிரமும் முதற் சூத்திரமும், பல உரைகளும்
விளக்கங்களும் தோன்றுவதற்கு இடம்தந்து ஆழ்ந்த பொருள் உடையனவாய்
உள்ளன. தொல்காப்பியத்திற்கு முதன் முதலில் உரை இயற்றிய இளம்பூரணர்.
பாயிரத்திற்குத் தெளிவான விளக்கம் தருகின்றார்; முதற் சூத்திரத்ததிற்குப்
போதுமான அளவு விரிவுரை தருகின்றார். இவருக்குப்பின் வந்த
நச்சினார்க்கினியர் தம் கல்வித்திறனைக்காட்டிப் புலமை மாண்பு வெளிப்படும்
வகையில் பாயிரத்தையும் முதற் சூத்திரத்தையும் ஆராய்ந்து விளக்குகின்றார்.
ஆனால், இவர் தொல்காப்பியரையும் அகத்தியரையும் பற்றி, கட்டுக்கதை
ஒன்றினை நுழைத்துக் குழப்பத்தை உண்டாக்குகின்றார். இலக்கிய வரலாற்றில்,
உண்மையை நெருங்கமுடியாதபடி இக்கதை தடை செய்கின்றது.

     பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிவஞான முனிவர் தமது
இலக்கண ஆராய்ச்சி வன்மையை - புலமைத்திறனை - கல்விப்பரப்பை
வெளிப்படுத்துதற்கு உரிய இடமாகத்