தொல்காப்பியப் பாயிரத்தையும், முதற் சூத்திரத்தையும் தேர்ந்தெடுத்தார்; அங்கே தம் ஆராய்ச்சிக் கருத்துக்களை அள்ளிச் சொரிந்தார்; இலக்கணப் புலமையைக் கொட்டி நிரப்பினார்; பல வேறு துறைகளில் தமக்கு இருந்த அரும்பெரும் திறங்களை யெல்லாம் வெளிக்காட்டினார். இவரது ஆராய்ச்சி, இலக்கண ஆராய்ச்சியாளருக்குப் பெரும் புதையல்; இலக்கணப் பயிற்சி பெற விரும்புவர்க்குத் தக்கதோர் படைக்கலக் கொட்டில்; மொழித்திறம் முட்டறுக்க எண்ணுவோர்க்குத் சிறந்த பயிற்சிக்கூடம். சிவஞான முனிவர் இளம்பூரணரையும் நச்சினார்க்கினியரையும் ஏனைய உரையாசிரியர்களையும் நன்கு புரிந்து கொண்டு, அவர்களின் அடி நெஞ்சத்தில் தோன்றி வெளிவரும் பலவகையான ஒலிகளையும் தெளிவாக உணர்ந்து விளக்கவுரை எழுதுகின்றார். எத்தனையோ காலமாக இலக்கணத்தில் தொடுவாரின்றிக் கிடந்த மேடுகளை - தகர்க்க முடியாத பெரும்பாறைகளை இவரே துணிவுடன் அணுகித் தகர்த்து எறிந்து வழிகாட்டுகின்றார். இருபதாம் நூற்றாண்டில் அரசஞ்சண்முகனார் இலக்கண ஆராய்ச்சிப் பரம்பரை தம் காலத்திலும் வாழ்கிறது என்பதை நினைவூட்டுவதுபோல. ‘சண்முக விருத்தி’ என்ற நூலை இயற்றினார். இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சிவஞான முனிவர் ஆகிய மூவர் உரையையும் கடந்து சென்று மேலும் சில ஆராய்ச்சித் துறைகளை வகுத்துத் தந்தார். ‘சண்முக விருத்திக்கும் மறுப்பு எழுந்தது. செந்தில்நாதன் என்பவர் சண்முக விருத்தியில் உள்ள சில கொள்கைகளை மறுத்துள்ளார். இந்த ஆராய்ச்சி உரைகளையும் பேராசிரியரின் பாயிரவுரையையும் தொகுத்து ‘உரைவளம்’ வெளிவந்துள்ளது. அதனைச் செப்பாகவும் பல அரிய செய்திகளுடனும் உருவாக்கியவர் ஆ. சிவலிங்கனார். வெளியிட்டது சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். சொல் இலக்கண ஆராய்ச்சி சேனாவரையருக்குப் பின், சொல் இலக்கண ஆராய்ச்சி மிக விரிவாக நடைபெற்றுள்ளது. சொல்லதிகாரத்திற்கு எழுந்த பல உரைகள், இந்த ஆராய்ச்சியினைத் தெளிவாக விளக்கும். வடமொழி இலக்கணக் கருத்து, சொல் இலக்கண ஆராய்ச்சியாளரால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு வடமொழி இலக்கண அறிவு இன்றியமையாதது என்பதை இவ்வுரையாசிரியர்கள் வற்புறுத்துகின்றனர். சொல்லதிகாரத்திற்கு |