இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர், பழையவுரையாசிரியர் ஆகிய அறுவர் உரைகண்டுள்ளனர். சொல் இலக்கண ஆராய்ச்சி, தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை காண்பதோடு அமையாது, தனியாகவும் வளரத் தொடங்கியது. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமிநாத தேசிகர், முன்னோர் நூல்களிலும் உரைகளிலும் சிதறிக்கிடக்கும் இலக்கணக் கருத்துக்களைத் தொகுத்து ஆராய்ந்து ‘இலக்கணக் கொத்து’ என்ற பெயருடன் சூத்திரமும் உரையுமாக ஓர் இலக்கண ஆராய்ச்சி நூல் வெளியிட்டார். சுப்பிரமணயி தீட்சிதர் ‘பிரயோக விவேகம்’ நூலில், சொல் இலக்கண ஆராய்ச்சியில் விரிவாக ஈடுபட்டுச் சூத்திரமும் உரையும் இயற்றினார். சிவஞான முனிவரின் இலக்கண விளக்கச் சூறாவளியும் சொல் இலக்கண ஆராய்ச்சியில் மிகுதியாக ஈடுபடுகின்றது. புலமைப்போர் இருபதாம் நூற்றாண்டில் இலக்கண ஆராய்ச்சி, புலமைப் போராய் வெளிப்படுகின்றது. ஆகுபெயர் அன்மொழித்தொகை ஆராய்ச்சி, முதற் குறள் ஆராய்ச்சி, துன்னூசி பற்றிய ஆராய்ச்சி ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இந்த ஆராய்ச்சிகளில் அரசஞ் சண்முகனார், மறைமலை அடிகள், யாழ்ப்பாணத்து இலக்கணச் சாமியார், திருமயிலை சண்முகம் பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளை, மாயவரம் சோமசுந்தரம் பிள்ளை ஆகியோர் தம் காலத்தில் வெளிவந்த பத்திரிகைகளில் தம் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டனர். அவற்றுள் சில நூல் வடிவம் பெற்றுள்ளன. அவை யாவும் இலக்கண ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயன்படும். 2. உரை வேற்றுமை ஒரு நூலுக்குப் பல உரைகள் தோன்றி, அவ்வுரைகள் வேறுபட்டிருப்பதைத் திருக்குறள் உரை வேற்றுமையால் அறியலாம். தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்குப் பல உரைகள் இருப்பதால் அவற்றிற்கு உள்ள வேற்றுமையை ஒப்பிட்டு ‘உரைவளம்’ தோன்றியுள்ளது. இவ்வாறே ஒரு நூலின் பல உரைகளை ஒப்பிடுவததோடு, ஏதேனும் ஒரு சொல், ஏதேனும் ஓர் இலக்கணக் குறிப்பு, ஏதேனும் ஒரு விளக்கம் ஆகியவை பற்றி வெவ்வேறு காலத்தில் தோன்றிய வெவ்வேறு நூலின் |