பக்கம் எண் :

681நோக்கு

உரையாசிரியர்கள் என்ன என்ன கருதினர் என்பதை அறிந்து இன்புறலாம்.

     என்மனார், போற்றி என்ற இரண்டு சொற்களைப்பற்றி
உரையாசிரியர்கள் கூறும் இலக்கணக் குறிப்புக்களை ஒப்பிட்டு ஆராய்வது
மிகவும் பயனுள்ள பணியாகும். இவ்வாறே போலி எழுத்தைப்பற்றிக்
காலந்தோறும் நிலவி வந்த கருத்துக்களைத் தொகுத்து ஆராயலாம். செப்பு
வினா வகைகள் பற்றி உரையாசிரியர்கள் கூறும் விளக்கங்கள் சுவையானவை;
வேறுபட்டவை.

     பொருள்கோள், சார்பு எழுத்துகள், திணை பால் எண் இடம் மரபு
செப்பு வினா ஆகியவற்றின் வழுவமைதி, உரிச்சொல் பற்றிய கோட்பாடு
ஆகியவற்றைத் தொகுத்து ஆராயலாம்.

     ஓர்தல் என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் கூறும் பல்வேறு
பொருள்களையும், முந்நீர் என்பதற்குத் தரும் விளக்கத்தையும் காண்போம்.

    தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
    குருகும் உண்டு

என்ற குறுந்தொகைப்பாடலில் ‘கால - குருகு’ என்பதைப் பற்றிய இலக்கணக்
கருத்துகளையும் காண்போம்.

ஓர்தல்

     இறையனார் களவியல் உரை: ஓர்ப்பு - ஒரு பொருளை ஆராய்ந்து
உணர்தல்.

     பரிமேலழகர்: அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய
ஆராய்ந்து (குறள் - 357).

     நச்சினார்க்கினியர்: கேள்வி ஓர்க்கும் (முருகு - 96) - யாகங்களில்
தீங்கு வராதபடி நினையா நிற்கும்.

     ஓர்ப்பனள் (முல்லை - 88) - கருதினள்.

     ஓர்க்கும் (பெரும் - 183) - செவி கொடுத்துக் கேடகும்.

     திருமுருகாற்றுப்படை பழைய உரை: ஓர்க்கும் (முருகு - 96) -
திருவுள்ளத்து அடைக்கும்.

முந்நீர்

    புறநானூறு பழையவுரை: ‘யாற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரும்
உடைமையால், கடற்கு முந்நீர் என்று பெயராயிற்று; அன்றி முன்னீர்
என்றோதி நிலத்திற்கு முன்னாகிய நீர் என்றும் உரைப்ப” (புறம் - 9).