பக்கம் எண் :

உரையாசிரியர்கள்688

கவிகளையும், மற்றும் பல தனிக் கவிகளையும் மனப்பாடம் செய்யத்
தொடங்கினால் வெகு சுலபத்தில் பாடமாகின்றமைக்குக் காரணம் அவை
கவிதா சக்தி மிகுதியால் இயற்றப் பட்டமையேயாம். இதனால்தான், பண்டு
தோன்றியனவும் இன்று தோன்றுகின்றனவுமான நூல்களுள், தனிக்கவிகளில்
ஒரு சில யாவராலும் பாராட்டப்பெறுதலும், ஒருசில அங்ஙனம்
பாராட்டப்படாது அபிமானம் வைத்த சிலரால் மட்டும் பாதுகாக்கப்படுதலும்
பெற்றுள்ளமை தெளியத்தகும்”* என்று கூறியுள்ள கருத்துக்கள்
உரையாசிரியர்கள் தம் உரைகளில் காட்டும் மேற்கோள் பாடல்களுக்கும்
பொருந்தும்.

     உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டிய பாடல்கள் மூன்று
வகையானவை.

     1. பெரிய நூல்களை - பல ஆயிரம் பாடல்கள் கொண்ட நூல்களைக்
கற்றுத் தேர்ந்து அவற்றிலிந்து மேற்கோள் காட்டப்பட்டவை.

     2. தமக்கு முன்னும், தம் காலத்திலும் வழங்கி வந்த சுவைமிகுந்த
தனிப்பாடல்கள்.

     3. உரைச்செய்யுட்கள் என்ற பெயருடன் தம் கவிதைத்திறனை
வெளிப்படுத்தி இயற்றியவை.

     இம் மூவகையான பாடல்களும் மேற்கோளாக உரைகளில் இடம்
பெறுகின்றன.

முதல் வகை

    பழங்கால இலக்கியங்களைக் கற்றுத் தமிழ்ச் சுவையில் மூழ்கிய
புலவர்கள்,

    இருந்தமிழே! உன்னால் இருந்தேன்; இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்
                                       - தமிழ்விடு தூது

    ஆயுந் தொறும் இன்பம் தரும் தமிழ்
                                       - கச்சியப்ப முனிவர்

    உள்ளுதோறு உள்ளுதோறு உணாஅமுது
    உறைக்கும் திருமுத்தமிழ்
                                       - கல்லாடம்

என்றெல்லாம் தம் அனுபவத்தை வெளியிட்டுள்ளனர்.


 * தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம் (1955), பக்கம் - 57, 58.