பக்கம் எண் :

687நோக்கு

அலங்கல் திரட்டும் மாறன் அலங்காரமும் பா-பாவினமும் தோன்றலாயின.

     உரைகளில் அமைக்கப்படும் உதாரணச் செய்யுட்கள் பலவகைச்
சிறப்புடையவை; சிறந்த கவிதைக்கு உரிய தன்மைகள் யாவற்றையும்
கொண்டவை. சிறந்த கவிதைக்கு உரிய இயல்புகளைப் பின்வருமாறு
வகைப்படுத்திக் கூறலாம்.

     1. ஓரிரு முறை படிக்கும்போது, கேட்டவுடனே நெஞ்சத்தில் ஆழப்
பதிந்து இடம்பெறும். நம்மை அறியாமலே நம் வாய் அதனை முணுமுணுக்கத்
தொடங்கும்; நெஞ்சில் இடம் பெற்று, மனப்பாடமாகிவிடும். ஆண்டுகள் பல
சென்றாலும் அழியாமல் இருக்கும்.

     2. எளிமையும் தெளிவும் உடையதாய் இருக்கும், கேட்டவுடனே
பொருளை உணர்த்தும்; எவ்விதக் குழப்பத்தையும் உண்டாக்காமல் தெளிவாய்
விளங்கும்.

     3. இதுவரை நம் உள்ளத்தில் தோன்றாத ஏதோ ஒரு வகையான புதிய
உணர்வை உண்டாக்கும். அந்தப் புதிய உணர்வு, அக்கவிதையை எப்போது
நினைத்தாலும் மிகுதிப்பட்டு மேன்மேலும் வளரும். அறிவும் உணர்வும் வளர
வளர அப்பாடல் தரும் புதிய உணர்வும் வளர்ந்து கொண்டே வரும்.

     4. சிறந்த கவிதை ஒன்றைக் கற்கும்போது, அது வேறொரு கவிதையை
நினைவூட்டுவதில்லை. ‘அதுபோன்று இது உள்ளதே’ என்று எண்ணவோ,
இதைவிடச் ‘சிறப்பாக வேறு சில கவிதைகள் உள்ளன’ என்ன நினைக்கவோ
முடிவதில்லை.

     மலைபடுகடாத்துள், ‘சேறு சிறந்து உண்ணுநர்ந் தடுத்தன தேமா’
என்ற அடிக்கு நச்சினார்க்கினியர், “பழமாக்கள் (மாம்பழங்கள்) சாறுமிக்கு
உண்பாரை வேறொன்றிற் செல்லவொட்டாமல் தடுத்துக்கொண்டன” என்று
எழுதும் உரை இங்கே கருதத்தக்கது.

     சிறந்த பொருள், தன்னை நுகரும்போது மற்றொன்றினை
நுகரவொட்டாமல் நினைக்கவும் விடாமல் தடுக்கும். ‘தோள் கண்டார் தோளே
கண்டார்’ என்றவாறு சிறந்த கவிதையில் ஆழ்ந்தவர்கள் வேறு ஒன்றினை
நினைக்கமாட்டார்கள்.

     இத்தகைய சிறந்த இயல்புகளை உரையாசிரியர்களின் மேற்கோள்
பாடல்களில் காணலாம். அதனால்தான் அவை எல்லோராலும் பாராட்டப்பட்டு
வருகின்றன.

     மு.ரா. கந்தசாமிக் கவிராயர், “பெரிய புராணம், திருவிளையாடற்
புராணம், கம்பராமாயணம் ஆகியவற்றில் உள்ள