உரையாசிரியர்கள் உரையில் இடம் பெறும் பாடல்கள் பலவகை நோக்கத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. அப் பாடல்களில் சில மறைந்து போன தமிழ்நூல்களுக்கு உரியவை. நூல் மறைந்து போனாலும் அந்நூல்களுக்குரிய பாடல்களைக் காத்து நல்கிய பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. அவர்கள் திரட்டித்தந்துள்ள பாடல்கள் சிறந்த கவிதைக் களஞ்சியமாய் உள்ளன. கற்கும்தோறும் சுவை நல்கும் கற்கண்டுக் கவிதைகளாய்ப் பல உள்ளன. உரையாசிரியர்களின் காலத்து இலக்கியமும், தனிப்பாடல்களும் உரைகளில் இடம் பெறுவதால் அக்கால இலக்கியங்களின் இயல்புபற்றி அறிய முடிகின்றது. இன்னும் சில பாடல்கள் வரலாற்று நிகழ்ச்சியைக் கூறுவனவாய் உள்ளன. பகைமன்னர்களின் படையெடுப்பு, முடிசூட்டுவிழா, மன்னர்களின் கொடைப்பண்பு, தலை நகரங்களின் மாண்பு ஆகியவை பற்றிய பாடல்கள் பல கிடைக்கின்றன. யாப்பருங்கல விருத்தியில் பல்லவ மன்னர்களைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீரசோழியத்தில் வீரராசேந்திரனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. தண்டியலங்காரத்தில் குலோத்துங்க சோழனைப் பற்றிய பாடல்களைக் காணலாம். உரையாசிரியர்கள் தம் சமயக் கருத்துக்களைப் பரப்பவும் உரைகளைக் கையாண்டனர். யாப்பருங்கல விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகை உரை, நேமிநாத உரை, நன்னூல் மயிலைநாதர் உரை ஆகியவற்றில் சமணத்தைப் போற்றிப் பரப்பும் பாடல்களைக் காணலாம். உதாரணம் காட்டும் சிறுசிறு தொடர்களையும் சமண சமயச் சார்புடையவையாய் அமைத்துள்ளனர். அருகனைப் பரவும் துதிப்பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளனர். வீரசோழியத்தில் பெருந்தேவனார் புத்ததேவனைப் பாடும் பாடல்கள் பலவற்றை எடுத்துக் காட்டியுள்ளார். பிற்காலத்தில் நன்னூலுக்கு உரை எழுதிய சங்கர நமச்சிவாயரும் சிவஞான முனிவரும் சைவ சமயத்திற்கு ஏற்ற பல உதாரணங்களைக் காட்டித் தம் சமயத்தைப் பரப்பினர். கல்விகற்கும் மாணவர் உள்ளத்திலேயே சமயக்கருத்தை விதைத்துச் சமயப் பயிர் வளர்க்க உரையாசிரியர்கள் முயன்று வந்தனர். அவர்கள் நோக்கம் இனிது நிறைவேறிற்று. காரிகை கற்பவர் சமணச் சார்புடைய உதாரணச் செய்யுட்களை மனப்பாடம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிற்காலத்தில், காரிகை கற்கச் சைவரும் வைணவரும் காரிகை கூறும் யாப்புக்கு ஏற்ற சைவ வைணவ சமயச் சார்புடைய பாடல்களை இயற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இத்தகைய முயற்சியின் விளைவால் சிதம்பரச் செய்யுட்கோவையும், திரு |