சிலப்பதிகாரத்தில் வரும், ‘அருந்திறல் பிரிந்த அயோத்தி போல’ (13:65) என்பதில், அருந்திறல் என்பதை அன்மொழித் தொகை என்கின்றார், அடியார்க்கு நல்லார். ஆகுபெயர், அன்மொழித்தொகை ஆய்வு அறிஞர்களிடையே எழுப்பியுள்ள கருத்து வேற்றுமையை இவை காட்டுகின்றன.* 3. மேற்கோள் பாடல்கள் சங்க நூல்களைத் தொகுக்க முயன்ற காலத்தில், பல ஆயிரம் பாடல்கள் அகம், புறம் பற்றியவை கிடைத்திருக்கக்கூடும். அவற்றை எல்லாம் திரட்டியபின் அகம், புறம் என்று பாகுபடுத்தி, அகவல், ஆசிரியம், கலி, பரிபாட்டு என்று வகைப்படுத்தி, அடிவரையறை நோக்கிப் பிரித்துத் தொகுத்தனர். அவ்வாறு தொகுக்கும்போது நானூறு என்ற எண்ணில் தொகுத்தவர்களுக்கு நாட்டம் பிறந்தது. அதனால் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்ற நான்கு தொகை நூல்களிலும் நானூறு நானூறு பாடல்கள் அமைந்திருப்பது சிந்தித்தற்கு உரியது. புறப்பொருள் பற்றிய பாடல்கள் நானூறு மட்டுமே கிடைத்தன என்று எண்ண முடியாது. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய தொகை நூல்களில் அந்த அந்த நூல்களுக்குரிய பாடல்கள் நானூறு மட்டுமே கிடைத்தன என்று கருத முடியாது. நானூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் கிடைத்திருக்கக்கூடும். அவற்றில் பொருள்சிறப்பு இல்லாதவை என்று சிலவற்றை ஒதுக்கி இருப்பார்கள்; ஒரே கருத்து உடையவை என்று சிலவற்றைப் புறக்கணித்திருப்பார்கள்; மரபுக்கு மாறானவை என்று சிலவற்றை விட்டுவிட்டிருப்பார்கள். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இடம் பெறாத எத்தனையோ பாடல்களை நாம் இழந்துவிட்டோமே என்ற ஏக்கம் நெஞ்சத்தில் எழுகின்றது. ஆனால் அத்தனை பாடல்களும் மறைந்துவிடவில்லை. கால வெள்ளைத்தில் நீந்தி ஒதுங்கி வந்து, சில பாடல்கள் வாழ்வு பெற்றுவிட்டன. உரையாசிரியர்களின் காலம்வரை வாய்மொழியாக - செவி வாயிலாக வாழ்ந்து வந்த பாடல்கள், உரைகளில் மேற்கோள்களாய் இடம் பெற்றன. உரையாசிரியர், தமக்கு முன் வழங்கி வந்த பழம் பாடல்களையும் தம் காலத்தில் தோன்றிய புதுப் பாடல்களையும் தம உரைகளில் எடுத்துக்காட்டியுள்ளனர். * இலக்கணத்தில் எழிற்கற்பனைகள் - பக். 70 ந.ரா. முருகவேள். |