‘மைவண்ண நறுங்குஞ்சி’ (21) என்ற பாடல் தவிர ஏனைய வற்றிற்கு உரை கிடைக்கவில்லை. திருவிருத்தத்திற்கு நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை அழகியமணவாள சீயர் அப் பிள்ளை பெரிய பரகால சுவாமி ஆகிய ஐவரும் உரை கண்டனர். பெரியவாச்சான் பிள்ளை உரை தவிர ஏனைய நான்கு பேர் இயற்றிய உரைகளும் மறைந்து போயின. நன்னூல் ஆண்டிப் புலவர் உரை ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன், செஞ்சிக்கு அண்மையில் உள்ள ஊற்றங்கால் என்னும் ஊரில் வாழ்ந்த ஆண்டிப்புலவர், விருத்தப்பாவில் நன்னூலுக்கு உரை எழுதினார். அப் புலவர் எழுதிய ஆசிரிய நிகண்டின் பாயிரம் நன்னூல் விருத்தப்பா உரையை, ‘உரையறி நன்னூல்’ என்று குறிப்பிடுகின்றது. இந் நூலிருந்து ஒரே ஒரு விருத்தப்பா மட்டுமே கிடைத்துள்ளது. ஏனைய பகுதிகள் கிடைக்கவில்லை. பரத சேனாபதீயம் உரை1 இந் நூலின் பாயிரங்களை மட்டும் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் நூல் நிலையம் வெளியிட்டுள்ளது. இதற்கு உரை இருந்தது. இன்று கிடைக்கவி்ல்லை. இந்நூலின் உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. இடைக்காடர் ஊசிமுறி உரை இடைக்காடர் ஊசிமுறி என்னும் நூலில் நாற்பத்தைந்து பாடல்கள் இருந்தன என்றும், அந் நூலுக்கு ஆறைப் பொறையிலான் உரை எழுதினார் என்றும் கூறப்படுகிறது.2 நூலும் உரையும் இன்று இல்லை! தொல்காப்பியம் சிவமயம் பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவர் மறைஞான சம்பந்தர் இயற்றிய பதிபசுப்பாசப் பனுவல் என்னும் சித்தாந்த நூலின் பாயிரம் இவரை, அருந்தமிழ் உணர்வால் அகத்திய முனியெனத் திருந்துதொல் காப்பியம் சிவமயம் செய்தோன் என்று குறிப்பிடுகின்றது. “இவர் செய்த நூல்களுள்ளே தொல்காப்பியம் சிவமயம் என்பன இரு நூல்களா? ஒரு நூலா என்பது 1. மறைந்துபோன தமிழ் நூல்கள் (பக்கம் 323). 2. செந்தமிழ் - 19 தொகுதி பக். 315. |