மயிலைநாதருக்குமுன் சிறந்து விளங்கிய அவிநய இலக்கணமும் அதன் உரையும் கிடைக்கவில்லை. ஆளவந்த பிள்ளை உரை நச்சினார்க்கினியர் மலைபடுகடாம் உரையில், ஆளவந்த பிள்ளை ஆசிரியர் என்று ஓர் உரையாசிரியரைக் குறிப்பிடுகின்றார். மலைபடுகடாத்துள் வரும் ‘தீயின் அன்ன ஒண் செங்காந்தள்” என்ற அடிக்கு (145)ப் பொருள் எழுதியபின், “இதற்கு நன்னன் என்னும் பெயர் தீயோடு ஒத்ததன்மையின், ஆனந்தமாய், பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தார் என்று ஆளவந்தபிள்ளையாசிரியர் குற்றங் கூறினார் எனின், அவர் அறியாது கூறினார்” என்று கூறுகின்றார். பேராசிரியர், தொல்காப்பியப் பொருளதிகாரம் மரபியலில், “தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்பது, மலைபடு கடாத்தினை ஆனந்தக் குற்றம் எனப் பிற்காலத்தான் ஒருவன் ஒரு சூத்திரங்காட்டுதலும், பதமுடிப்பு என்பதோர் இலக்கணம் படைத்துக் கோடலும் போல்வன” (மரபியல்-108) என்று பெயர் கூறாமல் ஆனந்தக் குற்றம் கூறியவரை மறுக்கின்றார். நச்சினார்க்கினியரால் மறுக்கப்படும் ஆளவந்த பிள்ளை ஆசிரியரும், பேராசிரியரால் மறுக்கப்படும் ஆசிரியரும் ஒருவரா? அல்லது இரு வேறு ஆசிரியர்களா? ஒருவரே ஆயின், ஆளவந்த பிள்ளை என்பவர் யார்? எந் நூலுக்கு உரை எழுதினார்? எவ்விடத்தில் மலைபடுகடாம் பாட்டிற்கு ஆனந்தக் குற்றம் கூறினார்? இந்த வினாக்களுக்குத் தக்க விடை இதுகாறும் கிடைக்கவில்லை. ஆளவந்த பிள்ளை உரையாசிரியராயின், அவர் செய்த உரை நூல் கிடைக்கவில்லை. யாப்பருங்கலவிருத்தி ஒழிபியலில் (பக்கம் 519-52, பவானந்தம் பிள்ளை பதிப்பு) விருத்தியுரைகாரர், மலைபடுகடாம் பாடலிலிருந்து நான்கு இடங்களை எடுத்துக்காட்டி, அவற்றிற்கு ஆனந்தக் குற்றம் கற்பித்துள்ளார் இவ்விருத்தியுரை காரர், ஆளவந்த பிள்ளையைப் பின்பற்றி இவ்வாறு ஆனந்தக் குற்றம் கூறினார் என்பதா? விருத்தியுரைகாரரை ஆளவந்த பிள்ளை பின்பற்றினார் என்பதா? ஆளவந்தபிள்ளை என்ற பெயர், வைணவசமயச் சார்புடையதாய் உள்ளது. வியாக்கியானங்கள் கூரத்தாழ்வானின் மைந்தரான பராசரபட்டர் திருநெடுந் தாண்டகத்திற்கு வியாக்கியானம் இயற்றினார். இன்று, |