பக்கம் எண் :

உரையாசிரியர்கள்750

     இவ்வுரையாசிரியர் ஊர் இன்று எங்கே உள்ளது என்பதை ஆராய்ந்து
அறிஞர் டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் கூறியுள்ளார்.* தஞ்சாவூர் மாவட்டம்,
திருத்துறைப் பூண்டி வட்டத்தில் கொறுக்கை என்னும் ஊருக்கு அருகேயுள்ள
மணக்குடி என்பதே இவ்வுரை யாசிரியர் ஊர் என்று அவர் கருதுகின்றார்.

     மணக்குடியான் பால்வண்ண தேவன் வில்லவ தரையன்
அகநானூற்றுக்கு அகவற்பாக்களால் எழுதிய உரை  நூல் மறைந்து விட்டது.

திருக்குறள் உரைகள்

    திருக்குறளுக்கு முற்காலத்தில் பதின்மர் உரை இயற்றினர். அவர்களை,

    தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
    பரிதி பரிமே லழகர்-திருமுலையர்
    மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு
    எல்லையுரை செய்தார் இவர்

என்ற வெண்பா குறிப்பிடுகின்றது. பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர்,
பரிதி, பரிப்பெருமாள் ஆகிய ஐவர் உரைகள் வெளிவந்துள்ளன. தருமர்,
தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர் ஆகிய ஐவர் உரைகளும்
கிடைக்கவில்லை.

அவிநய உரை

    அவிநயனார் என்ற சமணப் புலவர் இயற்றிய இலக்கண நூல் அவிநயம்.
இந்நூல், வெண்பாவாலும் ஆசிரியப்பாவாலும் ஆனது; எழுத்து சொல்
பொருள் ஆகிய மூன்று இலக்கணமும் உரைக்கும் நூல் என்றும் தெரிகின்றது.

     அவிநயத்திற்கு இராசபவித்திர பல்லவ தரையன் உரை இயற்றினார்
என்று நன்னூலின் உரையாசிரியர் மயிலைநாதர் கூறுகின்றார்.

     “இந்தப் பத்து எச்சமும் புவி புகழ் புலமை
     அவிநய நூலுள், தண்டலங் கிழவன் தகைவரு
     நேமி எண்திசை நிறைபெயர் இராச பவித்திரப்
     பல்லவ தரையன் பகர்ச்சி என்று அறிக”

                                                (நன்-359)

என்று மயிலைநாதர் கூறுவதால், அவிநய உரை பற்றி நாம் அறிந்து கொள்ள
முடிகின்றது.


 * செந்தமிழ்ச் செல்வி - 19 தொகுதி (பக்கம் 322 - 325)