கொள்ளுதல், நல்லறிவுடைய தொல்பேராசானாகிய அவரது பெருமைக்கு இழுக்காகும். அவர்தம் முதுமையில் குறுந்தொகைக்கு உரை எழுதத் தொடங்கி 380 செய்யுட்களுக்கு எழுதி முடித்த பின்னர் நோய்வாய்ப்பட்டதாலோ பிற காரணத்தாலோ மேல் எழுத இயலாத நிலையை அடைந்தனர் என்றே கொள்ளுதல் ஏற்புடைத்தாகும். பிற்காலத்தில் நச்சினார்க்கினியர் அவ்வரிய உரையைப் பின்பற்றி, அதற்கேற்ப எஞ்சிய செய்யுட்களுக்கு உரை எழுதி இருத்தல் கூடும்”* என்று டாக்டர் உ. வே. சா. கூறியிருப்பது பொருத்தமாய் உள்ளது. இவ்வாறு இருபெரும் உரையாசிரியர்களும் சேர்ந்து எழுதி முடித்த குறுந்தொகை உரை மறைந்துபோய்விட்டது. அவ்வுரையில் எத்தனை அரிய பெரிய கருத்துக்களும் விளக்கங்களும் இருந்தனவோ! அகநானூறு அகவல் உரை அகநானூற்றுக்கு முற்காலத்தில் அகவற்பாக்களால் ஆன உரை ஒன்று இருந்தது. உரைச் சிறப்புப் பாயிரம் அவ்வுரையாசிரியர் பெயர், ஊர், அகநானூற்றுக்கு அகவற்பாக்களால் உரை எழுதிய செய்தி ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது: ...நன்னெடுந் தொகைக்கு, கருத்தெனப் பண்பினோர் உரைத்தவை நாடின், அரியவை யாகிய பொருண்மை நோக்கிக் கோட்டம் இன்றி, பாட்டொடு பொருந்தத் தகவொடு சிறந்த அகவல் நடையால் கருத்துஇனிது இயற்றி யோனே; பரித்தேர் வளவர் காக்கும் வளநாட் டுள்ளும் நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பின் கெடலருஞ் சிறப்பின் இடையள நாட்டுத் தீதில் கொள்கை மூதூர் உள்ளும் ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச் செம்மை சான்ற தேவன் தொன்மை சான்ற நன்மை யோனே என்பது உரைச் சிறப்புப் பாயிரத்தின் ஒரு பகுதி. இப்பாயிரத்தின் கீழே, “இத்தொகைக் கருத்து அகவலாற் பாடினான், இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவ தரையன்” என்ற உரைநடைப் பகுதி உள்ளது. * குறுந்தொகை - உ.வே.சா. உரை. (1937) முகவுரை பக்கம் - 8. |