ஏனைய உரைகளைப் புலவர்கள் போற்றாது விட்டனர் என்று தெரிகிறது. அவ்வுரைகள் கால வெள்ளத்தில் மூழ்கி மறைந்து போயின. குறுத்தொகை: பேராசிரியர், நச்சினார்க்கினியர் உரைகள் நச்சினார்க்கினியர் பழைய நூல்களுக்குச் செய்துள்ள உரைகளை, பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும் ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும்-சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னார்க்கினிய மே என்ற வெண்பா தொகுத்துக் கூறுகின்றது. இவ் வெண்பாவால் குறுந்தொகையுள் இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்ற செய்தி வெளிப்படுகின்றது. நானூறு பாடல்கள் அடங்கியுள்ள அத்தொகை நூலின் இருபது பாடல்களுக்கு மட்டும் நச்சினார்கினியர் உரை எழுதவேண்டிய தேவையை அவரது உரைச் சிறப்புப் பாயிரம் விளக்குகின்றது. “பேராசிரியர் தம் கல்வித்திறனும் ஆராய்ச்சி வன்மையும் உலக மெல்லாம் அறிந்து போற்றும் வகையில் குறுந்தொகையில் 380 பாடல்களுக்கு விளக்கம் எழுதினார்; அந் நூலில் இருபது பாடல்களுக்கு மட்டும் அவர் பொருள் எழுதவில்லை. பேராசிரியர் உரை காணாத இருபது பாடல்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதினார்” என்று நச்சினார்க்கினியரின் உரைச் சிறப்புப் பாயிரம் கூறுகின்றது: நல்லறி வுடைய தொல்பே ராசான் கல்வியும் காட்சியும் காசினி அறியப் பொருள்தெரி குறுந்தொகை இருபது பாட்டிற்கு இதுபொருள் என்று,அவன் எழுதாது ஒழிய இதுபொருள் என்றுஅதற்கு ஏற்ப உரைத்தும் என்பது அவர் உரைப் பாயிரப் பகுதி. நல்லறிவுடையதொல் பேராசானாகிய பேராசிரியர் இருபது பாடல்களுக்கு ஏன் உரை எழுதவில்லை என்பது விளங்கவில்லை. அவர், உரை எழுதாத பாடல்கள் எவை என்றும் தெரியவில்லை. இதைப்பற்றி டாக்டர் உ. வே. சா கூறியுள்ள கருத்துக்கள் போற்றத்தக்கவையாய் உள்ளன. “அவர் (பேராசிரியர்) உரை எழுதாது விடுத்த இருபது செய்யுட்கள், பின் இருபது செய்யுட்களாக இருத்தல் கூடும். இடையிடையே பொருள் தோன்றாமல்விட்ட செய்யுட்கள் என்று |