இளம்பூரணர் உரை இளம்பூரணரை ‘உரையாசிரியர்’ என்று மற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உரையாசிரியர் என்ற சொல் இளம்பூரணரையே குறிக்கும். இளம்பூரணர் பெயரால் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வெளிவந்துள்ளது. அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், சேனாவரையர் ஆகியோர் தம் உரைகளில் உரையாசிரியர் கருத்தாகச் சிலவற்றை எடுத்துக் கூறுகின்றனர். அவர்கள் குறிப்பிடும் சில இடங்களில் இளம்பூரணர் உரை, அச்சில் வெளிவந்துள்ள நூல்களில் காணப்படவில்லை. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில், குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட செய்தியினைக் கூறி, “உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும்” என்று வேனிற் காதையின் தொடக்கத்தில் கூறுகின்றார். நச்சினார்க்கினியர் மதுரைக் காஞ்சியில், தென்னவன் பெயரிய துன்னருந் துப்பின் தொன் முதிர் கடவுள் (40,41) என்ற அடிக்கு, “இராவணனைத் தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த அகத்தியன்” என்று பொருள் கூறியபின், “இராவணன் ஆளுதல் பாயிரச் சூத்திரத்து உரையாசிரியர் கூறிய உரையானும் உணர்க” என்று உரைக்கின்றார். அடியார்க்கு நல்லார் குறிப்பிடும். இளம்பூரண அடிகள் முகவுரையும், நச்சினார்க்கினியர் கூறும் உரையாசிரியர் பாயிரச் சூத்திரவுரையும், இன்றுள்ள தொல்காப்பிய இளம்பூரணர் உரையில் காணப்படவில்லை. நச்சினார்க்கினியர் உரை தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். இவர் உரை, எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் ஆகிய இரு பகுதிகளுக்கும் முழுமையாகக் கிடைத்துள்ளன. பொருளதிகாரத்திற்கு முதல் ஐந்து இயல்களுக்கும், செய்யுளியலுக்கும் மட்டுமே இவரது உரை உள்ளது. மெய்ப்பாட்டியல், உவம இயல், மரபியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் உரை கிடைக்கவில்லை. செய்யுளியலிலும் சில சூத்திரங்களுக்கு இவரது உரை இல்லை. |