பேராசிரியர் உரை பேராசிரியர் பொருளதிகாரம் முழுவதற்கும் உரை இயற்றினார் என்பதற்கு, அவரது உரைகளில் சான்றுகள் உள்ளன. பொருளதிகாரத்தின், பின்நான்கு இயல்களாகிய மெய்ப்பாட்டியல், உவம இயல் செய்யுளில், மரபியல் ஆகிய நான்கிற்கும் மட்டுமே பேராசிரியர் உரை உள்ளது. ஏனைய இயல்களின் உரை மறைந்துவிட்டன. தொல். சொல். கல்லாடர் உரை இவ்வுரை, கிளவியாக்கம் முதல் இடையியல் வரையிலுமே உள்ளது. பின்னுள்ள பகுதிக்கு இவ்வுரை இல்லை. தொல். சொல். பழைய உரை கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல் ஆகிய மூன்றிற்கு மட்டுமே இப் பழைய உரை கிடைத்துள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு: பழைய உரைகள் பதினெண் கீழ்க்கணக்கில் பலவற்றிற்குப் பழைய உரைகள் உள்ளன. பின்வரும் நூலின் பகுதிகளுக்குப் பழைய உரைகள் கிடைக்கவில்லை. ஏலாதி: 1 முதல் 8 பாடல்கள் உரை இல்லை. திணைமாலை நூற்றைம்பது: 128-150 வரை-உரை இல்லை. திணைமாலை எழுபது: 25-70 பாடல்களுக்கு இல்லை. கைந்நிலை: 1-17, 27 - 34, 44 - 52 பாடல்களுக்கு உரை இல்லை. கார் நாற்பது: 23-38 பாடல்களுக்கு இல்லை. அகநானூறு-பழைய குறிப்புரைகள் அகநானூற்றுக்குப் பழைய உரைகள் இரண்டு உள்ளன. ஒன்று குறிப்புரை மற்றொன்று சொல் விளக்கமும் பாட்டிற்குத் தேவையான அடிக்குறிப்பும் கொண்ட எளியவுரை. குறிப்புரை, அகநானூற்றின் முதல் 90 பாடல்களுக்கே உள்ளது. எளியவுரை, தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே சிலச்சில பாடல்களுக்கு மட்டுமே உள்ளன. இவ்வுரையாசிரியர்கள் எழுதியவை அவ்வளவுதானா, அல்லது மற்றப் பாடல்களின் உரைகள் மறைந்து போயினவா என்பது தெரியவில்லை. புறநானூறு-பழையவுரை புறநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உள்ளது. இவ்வுரை 266 பாடல்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. |