பக்கம் எண் :

உரையாசிரியர்கள்84

          மதிநுட்பம் நூலோடு உடையவர்

என்றும்,

          பல்கேள்வித் துறைபோகிய
         தொல்லாணை நல்லாசிரியர்

(பட்டின-169, 70)

என்றும் பாராட்டுதல் தகும். அவர்கள் நுண்மாண் நுழை புலம் உடையவர்கள்;
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண வல்லவர்கள். அவர்களின் பண்பட்ட
உள்ளம், அறிவுத் திறன், கல்வி மாண்பு, விருப்புவெறுப்பு அற்ற தன்மை
ஆகியவற்றை நோக்கும்போது,

                             .... இகலோடு
         செற்றம் நீக்கிய மனத்தினர்; யாவதும்
         கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத்
         தாம்வரம்பு ஆகிய தலைமையர்; காமமொடு
         கடு்ஞ்சினம் கடிந்த காட்சியர்

(திருமுருகு 131-35)

என்று அவர்களைப் போற்றத் தோன்றுகிறது.

     நூலாசிரியரை ஒத்த புலமை, உரையாசிரியர்களுக்கும் உண்டு.

          புலம்மிக் கவரைப் புலமை தெரிதல்,
         புலம்மிக் கவர்க்கே புலனாம் !

(பழமொழி 8)

என்ற மணிமொழி, உரையாசிரியர்களின் இயல்பை அறிந்து மதிப்பவர்
நினைவுக்கு வரும்.

     நூலாசிரியர்களின் ஆற்றலை நன்கு உணர்ந்தவர்கள்
உரையாசிரியர்களே. “மிக விரைவாக ஓடிச் செல்லும் ஒரு பேரியாற்றை
எதிர்த்து நீந்தி, அந் நீரோட்டத்தின் வன்மையை இற்றென உணர
முற்படுவோர் போல, தாம் உரை எழுத மேற்கொண்ட சான்றோர்
செய்யுட்களில் உள்ள சொற்களின் செலவை எதிர்த்து ஆராய்ந்து உண்மைப்
பொருள்கண்டு உலகிற்கு உதவியவர் (உரையாசிரியர்களே) ஆவர்”
1

     உரையாசிரியர்கள், பல நூல்களைக் கற்றுத் தெளிந்த பின்னர்,
ஏதேனும் ஒரு நூலைத் தமக்கு உரியதாகத் தேர்ந்து எடுத்துக் கொண்டு,
அந்நூலில் மூழ்கினர்; வாழ்நாள் முழுதும் அதில் தோய்ந்து தம் புலமைத்
திறன் முழுதும் காட்டி அந்நூலுக்கு உரை கண்டனர்; ஒன்றே செய்து,
அதனையும் நன்றே


1. உரைநடைக் கோவை, பக்கம்-13, பண்டிதமணி.