உரையாசிரியர்கள் வேண்டும். காட்டுவித்தால் அன்றி அவற்றைக் காண இயலாது. ‘காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே’ என்று அப்பர் கூறி இருப்பதுபோல, அரிய பொருள்களைக் காட்டுவிப்போர் துணையின்றிக் காண முடியாது. உரையாசிரியர் செய்யும் உதவியை, கண்ணைக் கெடுப்பர் கவிராயர்; அக்கண்ணை எண்ணி உரைகாரர் ஈவாரே-மண்ணுலகில் ஆக்கு பவரோ, அழிப்பவரோ மேலாவார்? நோக்கிநீ உண்மை நுவல் என்ற வெண்பாவில் நயம்படக் கவிமணி உரைக்கின்றார். கவிஞர்கள் தம் பாடலில், ‘கண்’ முதலிய வேற்றுமை உருபுகளை விரிக்காமல் இருப்பர். அதனால் கற்போர் பொருள் விளங்காமல் இடர்ப்படுவர் உரையாசிரியர்கள் அவற்றை விளக்குவர். இதுவே கவிமணி பாடலின் கருத்தாகும். திருக்குறளில், காலத்தினாற் செய்த நன்றி என்பதற்குப் பரிமேலழகர், “ஒருவனுக்கு இறுதி வந்த எல்லைக் கண் ஒருவன் செய்த உபகாரம்” என்றும்; காலிங்கர், “தாம் இடருறும் காலத்தின் கண் தமக்கு ஒருவர் செய்த நன்மை” என்றும் பொருள் கூறியிருப்பது இங்கே நினைவுக்கு வருகின்றது. குறளில் இல்லாத ‘கண்’ உருபு, உரையில் இடம்பெற்றுப் பொருள் விளக்கம் தருகின்றது. பழம்பெரும் நூல்கள், உரையாசிரியர்களின் உதவி இன்றேல் நமக்கு விளங்காமல் போய்இருக்கும்; இலக்கியச் சுவை வெளிப்படாமல் போய் இருக்கும்; ஆழ்ந்த விழுமிய பொருள் தோன்றாமல் போய்இருக்கும். இவ்வுண்மையை நன்கு அறிந்த பண்டிதமணி மு. கதிரேசன்செட்டியார் “நூலாசிரியரின் அரிய கருத்துக்களை எல்லாம் உரையாளர் உதவியாலேயே உலகம் உணர்ந்து இன்புறுகின்றது. பேருபகாரிகளாகிய உரையாசிரியர்களின் உதவி இல்லையாயின் பண்டை உயர் நூல்களாம் கருவூலங்களில் தொகுத்து வைத்த விலை வரம்பில்லாப் பொருள் மணிக் குவியல்களை யாம் எங்ஙனம் பெறுதல் கூடும்?” என்று வினவுகின்றார்.* புலமைச் செல்வர் உரையாசிரியர்களை, * உரைநடைக் கோவை - பக்கம். 25. |