டாக்டர் வ. சுப. மாணிக்கம், “உரைவகை ஒரு முயற்சி, சார்பிலக்கண நூல்வகை ஒருமுயற்சி, இலக்கிய வகை ஒரு முயற்சி. இம் மூவகை முயற்சியாலும் தொன்னூல்கள் இடைக் காலத்துப்பரவின; படிக்கப்பெற்றன” என்று உரையாசிரியர்களின் தமிழ்த் தொண்டை நினைவுபடுத்தியுள்ளார்.* எழுத்தறியத் தீரும் இழிதகைமை; தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதல்நூற் பொருள்உணர்ந்து கட்டறுத்து வீடு பெறும் என்று மக்களுக்கு அறிவுரை கூறி உரையாசிரியர்கள் இடை விடாது பழந்தமிழ் நூல்களைப் பரப்பி வந்தனர். குமரகுருபரர், பாட்டும் பாட்டின் பொருளும், பொருளால் பெறும் பயனும் தமக்கு நல்கும்படி கலைமகளை வேண்டுகின்றார்: பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்என்பால் கூட்டும் படிநின் கடைக்கண்நல் காய்,உளம் கொண்டுதொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம் காட்டும்வெள் ளோதிமப் பேடே ! சகல கலாவல்லியே (சகலகலாவல்லி மாலை - 7) என்ற பாட்டில், பாட்டிற்குரிய பெருமையை அதன் பொருள் உணர்ச்சிக்கும், பொருளால்பெறும் பயனுக்கும் அவர் அளித்துள்ளார். ஆதலின், ஒருவர் பாட்டை அறிவதோடு நில்லாமல், அதன்பொருளை அறிந்து மகிழவேண்டும்; பொருளின் பயனைப்பெற வேண்டும் என்பது விளங்குகின்றது. இருட்டறையில் உள்ள எழில்மிக்க ஒவியத்தைக் காணக் கண்கள் மட்டும் இருந்தால் பயனில்லை. இருளைப் போக்கும் ஒளி வேண்டும். பழம் பொருட்காட்சிச் சாலையில் உள்ள பலவகையான கலைச் செல்வங்களைக் கண்டுகளிக்க அவற்றைப் பற்றிய விளக்கவுரை வேண்டும். இனிய பலாப் பழத்தைச் சுவைத்து மகிழ, அதனை முறையாக அறுத்துச் சுளை எடுத்துத் தருபவரின் உதவி வேண்டும். இவ்வாறே பழம்பெரும் இலக்கண இலக்கியச் செல்வங்களைக் கற்று மகிழ்வதற்குத் தக்க * எந்தச் சிலம்பு, பக்கம் 77 (1964) |