தாயிற்று. இம் மீட்சி யியக்கத்திற்கு ஓர் அறிகுறியாகச் சங்க இலக்கியங்களுக்கும் அவற்றோடொத்த பெருமையுடைய குறள் போன்ற பெருநூல்களுக்கும் செவ்விய உரைகள் எழுதப்பட்டன.”* இவ்வாறு உரையாசிரியர்கள் தோற்றுவித்த பழந்தமிழ் மீட்சியியக்கம் ‘தமிழ்ப் பண்பாட்டுக் காப்பகம்’ ஆயிற்று; தமிழ்ச் சிந்தனையின் பிறப்பிடம் ஆயிற்று; புது இலக்கியம் தோற்றுவிக்கும் மறுமலர்ச்சி இயக்கம் ஆயிற்று; உறங்கிக் கிடந்த தமிழினத்தைத் தட்டி எழுப்பும் வீர முழக்கமாயிற்று. கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலமே உரையாசிரியர்கள் காலம். இந்த முந்நூறு ஆண்டுக் காலத்தில், குறிப்பிடத்தக்க புதிய இலக்கண நூலோ அரிய இலக்கியப் படைப்போ எதுவும் தோன்றவில்லை. இக் காலத்தில் தோன்றியவை எல்லாம் உரைகளே. தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் சிலப்பதிகாரம் திருவாய்மொழி ஆகியவற்றிற்குத் குறிப்புரை எழுதினர் சிலர்; பொழிப்புரை எழுதினர் சிலர்; விளக்கவுரை எழுதினர் சிலர்; பேருரை கண்டனர் சிலர். இதனால் பழமை புதுமை பெற்றது; மறைந்த பழந்தமிழ் மீட்சி பெற்றது. தொண்டர் திருக்கூட்டம் உரையாசிரியர்கள், தமிழ்மொழிக்குச் செய்துள்ள தொண்டு மலையினும் மாணப் பெரிது. தமிழகம், வேற்று இனத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து, நிலைகுலைந்து, தமிழ்மக்கள் தம் பண்பாட்டை மறந்த போதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கி, தமிழ்மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. வேற்றுமொழியும் நாகரிகமும் தமிழ்மண்ணில் புகுந்து, கால் கொண்டு தமிழ்ப்பண்பை மறக்கச் செய்த போதெல்லாம் உரையாசிரியர்கள், தமிழ்ப்பண்பை நினைவூட்டி, தமிழ் மக்களைத்தடுத்து ஆட்கொண்டனர். தமிழ்மொழியின் காலங் கடந்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாய் இருப்பவர்கள் உரையாசிரியர்களே. இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழியை வரம்புகட்டிக் காத்தும், இலக்கியக் கருத்துக்களை விளக்கிக் காலந்தோறும் பண்பாட்டை வளர்த்தும் தமிழினத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். * தமிழ்ச்சுடர் மணிகள் - (1968) பக். 197, 198. |