தமிழ்க்காவலர் உரையாசிரியர்களின் பணி, பழைய நூல்களுக்கு உரை கண்டதோடு நின்றுவிடவில்லை. பழைய நூல்களில் பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்த இடைச் செருகல்களை ஆராய்ந்து அவர்கள் நீக்கினர். எழுதியவரால் நேர்ந்த பிழைகளைக் களைந்தனர். படித்தவர் திருத்திய ஒவ்வாப் பாடங்களை ஆராய்ந்து போக்கினர். நூலிலுள்ள செய்யுட்களைப் பிழையின்றி மனப்பாடம் செய்வது முற்காலத்தவர் வழக்கம்.* மூலத்தைக்கற்றுத் தேர்ந்தவர், பிறகு உரைகேட்டுப் பொருள் அறிவர். மூலம் பிழையின்றி அமையவும், ஒரு பாடலுக்கு வேறுபட்ட பாடங்கள் தோன்றாமல் இருக்கவும், பல வேறுபாடங்களில் சரியான பாடம் அறியவும் மூலம்போற்றும் பயிற்சி துணை செய்தது. உரையாசிரியர்கள், தாம் உரை எழுதும் நூலின் மூலச் செய்யுட்கள் பிழையின்றி அமையப் பெரிதும் முயன்று காத்து வந்தனர். இதனை டாக்டர் வ.சுப.மாணிக்கம் பின்வருமாறு கூறுகின்றார்: “பாடங்கள் மேலும் பெருகாமல், காலந்தோறும் புகாமல் உரையாசிரியர்கள் தடுத்துவிட்டனர். ஒரு பாடத்தை மூலத்தில் தழுவிக் கொண்டு உரை வரைவர். மாறுபாடங்கள் இருக்குமேல் உரையிடைக் காட்டுவர். நல்ல பாடங்களுக்கும் இது உரையென வரைவர். அல்ல பாடங்களாயின் இப்பாடம் சரியன்று என மறுத்து ஒதுக்குவர். இங்ஙனம் பாடம் ஓதுவாரும் உளர் என்று சிற்சில இடங்களில் சுட்டிச் செல்வர். உரையாசிரியர்கள் பண்டைத் தமிழ் நூல்களுக்குச் செய்த ஒரு பெருந்தொண்டு மூலச் செம்மையாகும்” (கம்பர்-பக்-15) உரையாசிரியர்கள் அரிய நூல்கள் அழிந்து போகாமல் காத்து வந்தனர். பொருந்தாத உரைகள் தோன்றிப் பழைய நூலின் கருத்துக்களைப் பிழையாக விளக்கியபோது உண்மையான பொருளை விளக்கினர். ஒரு நூலுக்குப் போலி உரைகள் பல தோன்றித் தடுமாற்றத்தை உண்டாக்கிய போது பொருத்தமான உரை கூறினர். பரிபாடலுக்கு உரை எழுதிய பரிமேலழகர், அந்நூலில் இடைக்காலத்தில் வந்து சேர்ந்த பலவகை மாசுகளைப் போக்கி உரை கண்டதாய், உரைச் சிறப்புப்பாயிரம் கூறுகின்றது: *படிறில் கல்வி விரும்பினோன் பாடம் போற்றும் அதுபோல - பிரபுலிங்க, மாயை உற் - 49. |