பக்கம் எண் :

87அறிமுகம்

    மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின்
    தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும்,
    எழுதினர் பிழைப்பும், எழுத்துரு ஒக்கும்
    பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்
    ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம்
    திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலின்,

பரிமேலழகர் அவற்றைப் போக்கி நல்லதோர் உரை இயற்றிய தாய்க்
கூறுகின்றது உரை சிறப்புப் பாயிரம்.

திருக்குறளுக்குப் பரிமேலழகர்,

    ஓர்உரை இன்றி ஒன்பது சென்றும்
    ஐயுற வாக நையு று காலை

உரை இயற்றியதாய்க் கூறப்பட்டுள்ளது.

     பரிப்பெருமாள்,

    அரியவும் பெரியவும் அறிந்தோர் போல
    வசையில் வள்ளுவன் வாய்மொழிப் பொருளை
    இசைபட நுவல்வோர் இறந்த பின்னர்

திருக்குறளுக்கு உரை இயற்றியதாய் உரைச் சிறப்புப் பாயிரம் மொழிகின்றது.

     நச்சினார்க்கினியர்,

    பண்டைப் பனுவல்பல இறவாது நிலவ
    உரை எழுதி ஈந்தோன்

என்று பாராட்டப் பெற்றுள்ளார்.

     இவற்றை எல்லாம் நோக்கும்போது பண்டை உரையாசிரியர்களைத்
“தமிழ்நூற் காவலர்கள்” என்று போற்றத் தோன்றுகிறது.

ஒத்தமதிப்பு

    நூலாசிரியர்களுக்கு உரிய சிறப்புக்கள் யாவும் உரையாசிரியர்களுக்கும்
உரியவையாகும். மூலநூலைப் போலவே உரையும் சிறந்தது. உரைநூலின்
சிறப்பைத் தமிழ்ப்புலவர்கள் அடிக்கடி நினைவூட்டி, மூலநூலைப் போலவே
மதிக்குமாற அறிவுரை கூறியுள்ளனர்.

     இலக்கணக் கொத்தின் ஆசிரியரான சாமிநாத தேசிகர்,

     இவ்வுரை பெருகிற்று; சுருங்கிற்று;
     உரையால் அறிவித்தான்;
     இவ்வுரையது பெருமைக்கு ஒப்பில்லை;
                                       (இலக்-66)