பக்கம் எண் :

உரையாசிரியர்கள்88

என்றும்,

     உரையை எழுதினான்
                          (இலக்-80)

என்றும் உதாரணங்கள் கூறி, உரையின் பெருமையை நினைவூட்டியுள்ளார்.

     உமாபதி சிவாசாரியர்,

     வள்ளுவர்சீர் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே
     தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை-ஒல்லியசீர்த்
     தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
     தண்டமிழின் மேலாம் தரம்

என்று மூலநூல்களோடு ஒத்த வரிசையில் பரிமேலழகர் உரையையும்
வைத்துப் போற்றுகின்றார்.

     சிவப்பிராகாசர் வெங்கைக் கோவையுள் (107).

      சிந்தா மணியும் திருக்கோ வையும்எழு திக்கொளினும்
      நந்தா வுரையை எழுதல்எவ் வாறு நவின்றருளே

என்று உரைகளைப் போற்றுகின்றார்.

     டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர், “நூலாசிரியர்களைக் காட்டிலும்
உரையாசிரியர்கள் பாஷையில் மிக்க பயிற்சியுள்ளவர்கள் என்பதும் மிக்க
உபகாரிகள் என்பதும் ஒரு சாரார் கொள்கை” என்று கூறுகின்றார். 1   

உரைகள் - மூல நூல்கள்

    தமிழலக்கிய வரலாற்றில், இடைக்காலத்தை உரையாசிரியர்களின் காலம்
என்று கூறுவதுண்டு. டாக்டர். வ. சுப. மாணிக்கம் இக் காலத்தின் சிறப்பை,
“இடைக்காலம் என்பது உரைக்காலம் அன்று; தொன்னூல்களை உரை
என்னும் கயிற்றால் பிணித்த உயிர்க்காலம்” என்று குறிப்பிடுகின்றார்.2

     உரையாசிரியர்கள் பழைய நூல்களின் கருத்தோடு, தம் காலத்து
ஆராய்ச்சி இலக்கிய வழக்கு கொள்கை மரபு ஆகியவற்றையும் இணைத்துத்
தந்தனர். புதிய இலக்கண இலக்கிய நூல்கள் தோன்றாக்குறையை
உரையாசிரியர்களின் பணி நிறைவு செய்தது. உரைகள், பின்தோன்றிய
நூலாசிரியர்களுக்குக் கருத்தும் வடிவமும் தந்த மூல நூல்கள் ஆயின.


1. சங்கத் தமிழும் பிற்காலத்தமிழும் (பக். 154)
2. சிந்தனைக் களங்கள், பக். 6.