உரையாசிரியர்களைப் போற்றி உரைநயங்களில் திளைத்து புலவர்கள், உரையாசிரியர்களின் கருத்துகளைத் தாம் இயற்றிய நூல்களில் எடுத்தாண்டனர். மூலநூல்களைப் போலவே உரை நூல்களையும் மேற்கோளாகக் கொண்டனர். தொல்காப்பிய உரையாசிரியராகிய இளம்பூரணர் கூறிய பல கருத்துகளை நேமிநாதம், நன்னூல், நம்பியகப் பொருள் ஆகிய நூல்களின் ஆசிரியர்கள் தம் நூல்களில் எடுத்தாண்டுள்ளனர். பரிமேலழகர் கருத்துக்கள் சிலவற்றைச் சிவப்பிரகாசர் தம் நூல்களில் மேற்கொண்டுள்ளார். நூல்களை அரங்கேற்றிக் குற்றம் குறைகளை ஆராய்ந்து மதிப்பிட்டது போலவே, உரைகளையும் அரங்கேற்றிக் குற்றம் குறைகளை ஆராய்ந்து மதிப்பிடும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணிக்கு முதன் முறை உரை எழுதிச் சமணச் சான்றோர்களிடம் காட்டியபோது அதில் குறை பல கூறி மறுத்தனர். இரண்டாம் முறையாக அவர் சமண சமய நூல்களை மிக நன்றாகப் பயின்ற பின் புதிய உரை எழுதி அச் சான்றோர்களிடம் காட்டி அவர்களின் போற்றுதலைப் பெற்றார் என்ற வரலாறு இங்கே நினைக்கத்தக்கதாகும். நிலையான பெயர் ஆக்கியோர் பெயரை நூல்கள் பெற்றத போலவே, உரையாசிரியர்களின் பெயரால் உரைநூல்கள் பெயர்பெற்று வழங்குகின்றன. இளம்பூரணர் உரையை இளம்பூரணம் என்றும், நச்சினார்க்கினியர் உரையை நச்சினார்க்கினியம் என்றும், சேனாவரையர் பேராசிரியம் என்றும் வழங்கும் வழக்கம் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இலக்கணக் கொத்தின் பாயிரம், உளங்கூர் உரையாம் இளம்பூ ரணமும் ஆனா இயல்பின் சேனா வரையமும் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியமும் என்று உரைகளை உரையாசிரியர்களின் பெயராலேயே குறிப்பிடுகின்றது. நீலகேசி என்னும் சைன நூலுக்கு உரை எழுதியவர் சமய திவாகர வாமன முனிவர் என்பவர். நீலகேசி உரை, உரையாசிரியரின் பெயரோடு, ‘நீலகேசி விருத்தி சமய திவாகரம்’ என்று வழங்குகின்றது. நூலாசிரியருக்கு உள்ள சிறப்புகள் யாவும் உரையாசிரியருக்கும் உண்டு என்பதற்கு இவை தக்க சான்றுகளாகும். |