நக்கீரர் கபிலர் புகழேந்தி முதலிய புலவர்களின் பெயரைத் தமிழ்ப் பற்றுடையோர், தம் மக்களுக்கு இட்டு வழங்கியதைப் போலவே, உரையாசிரியர்களின் பெயரை மக்களுக்கு இட்டு மகிழ்ந்தவர் உண்டு. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் (1864-1921) தம் மக்கள் மூவர்க்கும் முறையே பரிமேலழகன் நச்சினார்க்கினியன் சேனாவரையன் என்று உரையாசிரியர்களின் பெயரை இட்டார். இன்றும் பலர், இவ்வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். வான்புகழ் சேக்கிழார் தம் நூலை, ‘உலகெலாம்’ என்று தொடங்கி ‘உலகெலாம்’ என்று முடித்தவர். நூலின் இறுதிப் பாடலில், “கற்பவர்க்கு என்றும் இன்பம் பெருகவும், கற்பவர் உள்ளம் ஒரு பொருளையே காதலித்து ஓங்கிடவும் சிவனடியார்களின் புகழ் (மிக்க வரலாறு), உலகெலாம் பரவி எங்கும் நிலை பெற்றது” என்று பாடியுள்ளார்: என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்று ளார்அடி யாரவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம். இலக்கிய உலகில் மிகச் சிறந்து விளங்குகின்ற இப் பாடலின் கருத்து, உரையாசிரியர்களுக்கும் பொருந்தும், இதில் உள்ள, மன்று ளார்அடி யாரவர் வான்புகழ் என்ற அடிக்கு ஈடாக, இன்த மிழ்உரை யாசிரி யர்புகழ் என்று, ஓர் அடியை இயற்றிச் சேர்த்துப் பாடலை அமைத்தால், அது உரையாசிரியர்கள் புகழை விளக்குகின்ற இனிய பாடலாக இருக்கும். 3. உரையின் வகைகள் இலக்கியம் பல தோன்றியபின், அவற்றின் இயல்புகளை ஆராய்ந்து கூறும் இலக்கணம் தோன்றுகிறது. எள்ளினுள் எண்ணெய் எடுப்பது போல இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம் என்பது ஆராய்ந்து கூறிய உண்மையாகும். |