அடி மரத்திலிருந்த கிளையும், கிளையிலிருந்து கவையும், கவையி லிருந்து கொம்பும் பிரிந்து வளர்ந்து நிற்பதுபோல நூலுக்குத் தோன்றிய உரை, விளக்கம், விரிவு ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து காலப் போக்கில் பெருகி வளர்ந்து வந்தன. உரைகளின் பல்வேறு வகைகளையும் அவற்றின் இயல்புகளையும் ஆராய்ந்து அறிந்த புலவர்கள், அவற்றி்ற்கு இலக்கணம் வகுத்தனர். உரையின் இலக்கணத்தை உரையாசிரியர்களே கூறினர். உரைத்திறம் உணர்த்துதலும் உரையின் இயல்புகளுள் ஒன்றானது. வயிர ஊசியும், மயன்வினை இரும்பும் செயிரறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும் தமக்கமை கருவியும் தாம்ஆம்; அவைபோல் உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே. என்ற பாடல் இங்கே நினைக்கத்தக்கதாகும். பாயிரம் நூலுக்கு உரை எழுதத் தொடங்குமுன், உரையாசிரியர்கள் நூலைப் பற்றிய பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறினர். நூல் உரைக்கும் ஆசிரியன் இயல்பு, நூல்கேட்கும் மாணாக்கன் தகுதி, பாடம் சொல்லும் முறை, பாடம் கேட்கும் முறை ஆகியவற்றையும், நூலின் வரலாறு, ஆசிரியர் வரலாறு ஆகியவற்றையும் விளக்கமாகக் கூறியபின் நூலுக்கு உரை எழுதத் தொடங்கினர். இவற்றோடு உலையின் வகைகளையும் அவற்றின் இயல்புகளையும் விளக்கினர். தம் கருத்துகளைச் சூத்திரங்களாக இயற்றி உரையின் இடையில் தாமே சேர்த்து வழங்கினர். உரையாசிரியர்கள் இயற்றியவை உரைச் சூத்திரங்கள் எனப்பட்டன. நூலுக்கு உரை எழுதத் தொடங்குமுன், உரையாசிரியர்கள் எழுதிய பொதுவிளக்கம் பாயிரம் என்று பெயர் பெற்றது. பின்னர்ப் பாயிரம் பலவகையாய் விரிவடைந்தது. இறையனார் களவியல் உரையே, பாயிரம் எவ்வாறு அமைய வேண்டும் என்று பிற்காலத்தவர்க்கு வழி காட்டியது. பாயிர வகை பாயிரம் பொது, சிறப்பு என இரண்டாய்த் தொடக்கத்தில் இருந்தது. பின் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் நூற்சிறப்புப் பாயிரம் என இரண்டாயிற்று. உரையாசிரியர்கள் நூலுக்குமுன், எழுதிய முகவுரை உரைப் பாயிரம் என்றும், உரையாசிரியர்களையும் உரைகளையும் சிறப்பிக்கும் பாயிரம் உரைச் சிறப்புப் பாயிரம் என்றும் வழங்கின. நூல் கூறும் |