பக்கம் எண் :

உரையாசிரியர்கள்92

பொருளைத் திரட்டிக் கூறுவது நூற்பாயிரம் அல்லது பதிகம் என்றும்
வழங்கலாயிற்று.
1

     இவற்றின் விளக்கத்தை இறையனார் களவியல் உரை, தொல்காப்பிய
இளம்பூரணா உரை, யாப்பருங்கல விருத்தியுரை ஆகியவற்றின் பாயிரப்
பகுதிகளில் கண்டு மகிழலாம்.

     உரையாசிரியர்கள், பாயிரத்தில் இயற்றிச் சேர்த்த உரைச் சூத்திரங்கள்
பலவாகும். அவை நாளடைவில் இயற்றியவர் பெயர் அறியாத வகையில்
ஒன்று தொகுக்கப்பட்டு நன்னூலில் பொதுப்பாயிரமாக உருவெடுத்தன.
நன்னூல் பொதுப்பாயிரச் செய்யுள்களில் பல, பிற உரையாசிரியர்கள்
இயற்றிவை; மேற்கோளாக எடுத்தாளப் பட்டவை; நன்னூலின் பொதுப்பாயிரம்
பவணந்தி முனிவர் இயற்றியது அன்று என்பதற்குத் தக்க சான்றுகள் கூறி
அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
2

     பிற்கால உரையாசிரியர்கள், தாம் இயற்றிய பொதுப்பாயிரத்தில் கூறிய
செய்திகள், தொல்காப்பிய மரபியலில் கூறப்பட்டுள்ளன. மரபியல்
தொல்காப்பியத்தின் இறுதியியல். இதனுள் தொல்காப்பியர், சொற்கள்
தொன்று தொட்டு வழங்கிவரும் மரபினைக் கூறுகின்றார். இளமைப் பெயர்,
ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் இவற்றிற்குரிய மரபுகளைக் கூறிய பின்,
மரம் புல் ஆகியவற்றின் உறுப்புகளுக்குரிய பெயர்களின் மரபைக் கூறி
விளக்குகின்றார். மரபியல் என்பதற்குப் பொருத்தமாக இவற்றின் மரபுகளைக்
கூறுகின்றார் எனலாம். ஆனால் நூலின் வகைகள், உரையின் வகைகள்
ஆகியவற்றைக் கூறும் சூத்திரங்கள் மரபியலின் இறுதியில் இடம் பெறுவது
பொருந்தாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அவை,
பிற்காலத்தில் எழுந்த இடைச் செருகல்களோ என்று ஐயுறுகின்றனர்.
அவர்கள் அவ்வாறு எண்ணுதற்குரிய காரணங்களைக் கூறியுள்ளனர்.

     1. “செய்யுளியலுள் நூலைப்பற்றியும் அதன் பகுதிகளாகிய சூத்திரம்,
ஓத்து, படலம் என்பவற்றைப் பற்றியும் உரைவகை நடையைப் பற்றியும்
விளக்கிய ஆசிரியர், மீண்டும் அவற்றின் இயல்பினை ஈண்டுக் கூறுதல்”,
கூறியது கூறலாம்.

     2. இப்பொருள்பற்றிச் செய்யுளியலில் அமைத்த சூத்திரங்களையும்
இவ்வியலில் உள்ள சூத்திரங்களையும் ஒப்பவைத்து நோக்குங்கால்,
இவ்விருவகைச் சூத்திரங்களும்


1. Journal of the Annamalai University Vo1. XII. பக்கம் 140-144 டாக்டர் வ.சுப. மாணிக்கம்.

2. தொல்காப்பியம் - க. வெள்ளைவாரணன், பக். 306.