சொல் நடையாலும் பொருள் அமைப்பாலும் தம்முள் வேறுபாடு உடையவாதல் நன்கு புலனாகும். 3. நூன்மரபு பற்றிய இச்சூத்திரங்கள், தொல்காப்பியனார் காலத்திற்குப் பின்பு இயற்றப் பெற்று வழங்கியவை, பிற்காலத்தவரால் எல்லா நூற்கும் உரிய பொதுப்பாயிர மரபாக இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். 4. பின்வந்த உரையாசிரியர்கள் இச்சூத்திரங்களையும் தொல்காப்பியனார் வாய்மொழி எனவே கொண்டு எழுத நேர்ந்ததையும் எண்ணுதற்கு இடமுளது.”1 உரை வகை தொல்காப்பியர் செய்யுளியலில், நூல்எனப் படுவது நுவலும் காலை முதலும் முடிவும் மாறுகோள் இன்றி்த் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உள்நின்று அகன்ற உரையொடு புணர்ந்து நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே, (செய். 159) என்று கூறுகின்றார். “உள் நின்று அகன்ற உரை” என்று கூறி இருப்பது உற்று நோக்கத் தக்கது. செய்யுளியலில் ‘அகன்ற உரை’ என்று கூறினரே அன்றி உரையின் வகைகளைக் கூறவில்லை. ஆனால் மரபியலில் உள்ள சூத்திரங்கள் உரையினைக் காண்டிகை, உரை என இரண்டாகக் கூறி விளக்குகின்றன. உரை என்ற சொல், விருத்தி என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற் கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும் (மர. 102) விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச் சுட்டின சூத்திரம் முடித்தற் பொருட்டா ஏது நடையினும் எடுத்துக் காட்டினும் மேவாங்கு அமைந்த மெய்ந்நெறித் ததுவே (மர 104) என்ற சூத்திரங்கள் இரண்டும் காண்டிகை உரையின் இயல்பினைக் கூறுகின்றன. 1. தொல்காப்பியம் - க. வெள்ளைவாரணன், பக். 305. |