சூத்திரத்து உட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையாது இயைபவை எல்லாம் ஒன்ற உரைப்பது உரைஎனப் படுமே. (மர. 105) மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்த் தன்னூ லானும் முடிந்தநூ லானும் ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித் தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத் துணிவோடு நிற்றல் என்மனார் புலவர். (மர. 106) - இவை (விருத்தி) உரை பற்றியவை. இச்சூத்திரங்கள் நான்கிற்கும் பேராசிரியர் எழுதியுள்ள விளக்கம் படித்து இன்புறத் தக்கதாகும். இறையனார் களவியலுரை, உரை நான்கு வகைப்படும் என்று கூறுகின்றது: “சூத்திரம் உரைக்கின் அது நான்கு வகையான் உரைக்கப்படும்: கருத்துரைத்து, கண்ணழித்து, பொழிப்புத் திரட்டி அகலம் கூறல் என”. நம்பியகப்பொருள் உரை நான்கு வகை உரைகளின் தன்மையையும் பின்வருமாறு விளக்குகின்றது: “பொருளுரை நான்கு வகைப்படும்: கருத்து உரைத்தலும், கண்ணழித்து உரைத்தலும், பொழிப்புத் திரட்டலும், அகலங் கூறலும் என. “அவற்றுள் கருத்து உரைத்தலாவது, சூத்திரத்தின் உட்கோள் உரைத்தல். “கண்ணழித்தலாவது, சூத்திரத்துள் சொற்றோறும் பொருள் உரைத்தல். “பொழிப்புத் திரட்டலாவது, சூத்திரப் பொருளை எல்லாம் தொகுத்து உரைத்தல். “அகலங் கூறலாவது, சூத்திரப் பொருளைத் தூய்மை செய்தற்குக் கடாவும் விடையும் உள்ளுறுத்து விரித்து உரைத்தல்”. நாலடியார், ஒரு நூலுக்குச் சிறந்தவுரை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதை, பொழிப்புஅகலம் நுட்பம்நூல் எச்சம்என்று ஆற்றக் கொழித்துஅகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் |